பிக்பாஸ் நிகழ்ச்சி: தமிழர் பண்பாட்டை அழிக்கும் வணிக நச்சு  இதைத் தமிழக அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்துள்ளர். 

Advertisment

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிககியில், “தமிழர் பண்பாடு என்பது, நெஞ்சில் நாணம், வாழ்வில் ஒழுக்கம், நாவிலே நெறி என்று, பன்னெடுங்காலமாக வடிவெடுத்த ஒரு நாகரிகச் செல்வம். அந்த மகத்தான செல்வத்தை, இன்று ‘பொழுதுபோக்கு’ என்றப் பெயரில் அழிக்க முயலும் ஒரு வணிகப் பாம்பு தான், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி. தமிழர் மரபையும் மதிப்பையும் கேலி செய்து, சீரழிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. இது உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய சமூகச் சீரழிவு. தமிழர் பண்பாட்டையும், குடும்ப அமைப்பையும் குலைக்கும் நச்சு நிகழ்ச்சி இது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் தினசரி அத்தியாயங்கள் சண்டை, குரோதம், ஆபாசம், பொய், துரோகம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளின் களமாகவே இருக்கின்றன. இவை எதுவுமே தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய அடையாளங்கள் அல்ல. தமிழர் குடும்பம் என்பது 'அன்பு, அரவணைப்பு, விட்டுக்கொடுத்தல்' ஆகிய விழுமியங்களுடன் வாழும் ஓர் உன்னதமான அமைப்பு.

Advertisment

ஆனால், இந்த நிகழ்ச்சி இளைஞர்களுக்கு வெறுப்பையும், வன்முறையையும், தனிமனித மோதல்களையும் மட்டுமே வாழும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறது. இது குடும்ப நல்லிணக்கத்திற்கும், சமூக ஒழுக்கத்திற்கும் எதிரானத் தீவிரமான பண்பாட்டு அச்சுறுத்தல் ஆகும். தமிழ் இனத்தின் தொன்மையை மறக்கடிக்கும் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களிலும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், விதிமீறல்கள், மற்றும் சமூக எதிர்ப்புகளை எழுப்பியுள்ளது.

கர்நாடகா: Bigg Boss Kannada நிகழ்ச்சியின் ஸ்டுடியோ மீது மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB), சுற்றுச்சூழல் விதிகள் மீறப்பட்டதாகக் கூறி மூடல் உத்தரவு பிறப்பித்தது.

Advertisment

கேரளம்: Bigg Boss Malayalam நிகழ்ச்சி, கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக 2021-இல் இடைநிறுத்தப்பட்டது.

ஆந்திரப் பிரதேசம்: Bigg Boss Telugu நிகழ்ச்சிக்கு எதிராக பொதுநல மனுக்கள் (PILs) தாக்கல் செய்யப்பட்டு, உயர் நீதிமன்றம் பல முறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிகழ்ச்சியால், சட்ட மீறல், கலாச்சார வீழ்ச்சி, சமூக எதிர்ப்பு ஆகியவையே பின்தொடர்கின்றன. இது ஒரு நிகழ்ச்சி அல்ல. இது ஒரு வணிக நோயாக மாறி, ஒவ்வொரு மாநிலத்திலும், ஒழுக்கத்தை ஒட்டுமொத்தமாகக் குலைக்கிறது. இது, இளைஞர்களின் எதிர்காலத்தைக் கெடுக்கும் ஊடக நஞ்சு. எதிர்காலத் தலைமுறைக்கு அறிவை வளர்க்க வேண்டிய நேரத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி அனைவரின் மனநிலையையும் மாசுபடுத்துகிறது.வன்முறை, ஆபாசம், வஞ்சகம் ஆகியவற்றை இயல்பாக்கி, சமூகத்திற்கு கேடான வார்த்தைகளை பயன்படுத்தி, அதை ஒரு பொழுதுபோக்காகக் காட்டுகிறது. இது கல்விக்கும், சமூக சேவைக்கும், ஆரோக்கியமான உளவியலுக்கும் எதிரான ஒரு ஊடக உளவியல் தாக்குதலே ஆகும். வர்த்தக நலனுக்காக மக்களை ஏமாற்றும் இந்த நிகழ்ச்சி, பொது மக்களின் நலனுக்கானதல்ல, முழுவதுமாகக் கார்ப்பரேட் நிறுவனங்களின் பண வணிக நலனுக்காகவே வடிவமைக்கப்பட்ட ஒன்று. இதில் பங்கேற்கும் சிலரை சண்டை,  அவதூறுகள் மூலம் பிரபலமாக்கி, அதன் மூலம் வரும் சர்ச்சைகளை டிவி சேனல்கள் பணமாக்குகின்றன. “பொழுதுபோக்கு” என்ற பெயரில் நடக்கும் இந்த வணிக ஏமாற்றத்தை, மக்கள் விழித்துணர்ந்து நிராகரிக்க வேண்டும்.

தமிழக அரசு, தமிழ் மரபையும் , எதிர்காலச் சந்ததியையும், காக்கும் கடமையின் அடிப்படையில், உடனடியாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும், தமிழ் ஊடகங்களில் பண்பாட்டு மதிப்புகள் நிலைத்திருக்க, 'Cable Television Regulation Act, 1995' மற்றும் 'Program Code' விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறதா? என்பதை, உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.