கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி பா.ஜ.க தவிர தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இந்த சூழ்நிலையில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை வழங்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி இன்று (26-09-25) தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என மத்திய அரசு மிரட்ட முடியாது’ என்று பதிலளித்துள்ளது.