Tamil Nadu government news in court at Case against S.P. Velumani
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எஸ்.பி. வேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அப்போது சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில் 98 கோடியே 25 லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 6 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எதிராக அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவுக்கு பதிலளித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு எதிரான வழக்கு தொடர்பாக மத்திய அரசின் அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (03-02-26) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்ததாவது, ‘2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர மத்திய அரசிடம் அனுப்பிய கடிதம் நிலுவையில் உள்ளது. எனவே, அது தொடர்பாக மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Follow Us