'திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை இருக்கும் இடத்திலேயே  தொடர்ந்து செயல்பட திமுக அரசு அனுமதிக்க வேண்டும்' என பாமகவின் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சென்னையை அடுத்த திருவேற்காடு காடுவெட்டி பகுதியில் கிட்டத்தட்ட  60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  இடமாற்றம் என்ற பெயரில் மூடுவிழா நடத்த  தமிழக அரசு துடிக்கிறது. கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வரும்  ஆரம்ப சுகாதார நிலையத்தை மூட முயல்வது கண்டிக்கத்தக்கது.

Advertisment

காடுவெட்டி பகுதியில் 1967-ஆம் ஆண்டில்  அரசு மகப்பேறு மையமாகத்  தொடங்கப்பட்ட இந்த  மருத்துவ மையம்,  2013ல் விரிவாக்கம் செய்யப்பட்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக செயல்பட்டு வருகிறது. திருவேற்காடு நகரம், அதைச் சுற்றியுள்ள சுந்தர சோழபுரம், காடுவெட்டி, கண்ணப்பாளையம், வீரராகவபுரம்,  கோலடி உள்ளிட்ட  20க்கும் மேற்பட்ட கிராமங்கள்  இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தால் பயனடைந்து வருகின்றன.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை  நூம்பல் பகுதியில் புலியம்பேடு பகுதிக்கு மாற்ற திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில்  மக்களிடமிருந்து பறித்துக் கொள்வதை ஏற்க முடியாது. காடுவெட்டி பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், அதை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் நோக்குடன்  2022-ஆம் ஆண்டில்  ரூ.1.20  கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியைக் கொண்டு  காடுவெட்டி பகுதியிலேயே  ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தியிருந்தால் எந்த சிக்கலும் ஏற்பட்டிருக்காது

Advertisment

ஆனால், அதற்கு பதிலாக நூம்பல் புலியம்பேடு பகுதியில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுவது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம் ஆகும்.  காடுவெட்டி பகுதி ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள்  மருத்துவமனைக்கு எளிதாக வந்து செல்ல முடிகிறது. ஆனால், புதிதாக அமைக்கப்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் 7 கி.மீ  தொலைவில் அமைக்கப்படுகிறது. அங்கு செல்ல போக்குவரத்து வசதியும் இல்லை; சாலை வசதியும் இல்லை. இத்தகைய சூழலில் திருவேற்காடு மக்கள் அங்கு சென்று மருத்துவம் பெற இயலாது.

மருத்துவமனைகள் மக்களின் நலனுக்காகத் தான் இருக்க வேண்டும். எனவே,  காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையம் இப்போது இருக்கும் இடத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். நூம்பல் புலியம்பேடு பகுதியில்  கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அந்த நிலையத்திற்கு தேவையான மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை அரசு நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளார்.