நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டுமானால் அவர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET ) எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என 2009 ஆம் ஆண்டு கட்டாய கல்வி உரிமைச் சட்டம் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. அதற்குப் பிறகு சில நியமனங்கள் TET எனும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாமலே சில மாநிலங்களில் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவ்வாறு சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தாலும் கட்டாயம் ஆசிரியர் தகுதிததேர்வினை எழுதி தேர்ச்சி பெற்றுத் தான் பணியில் தொடர முடியும் என்று வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்ததாவது, ‘2009 ஆம் ஆண்டு இந்த சட்டம் வருவதற்கு முன்பாகவே பணியில் சேர்ந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. பல்வேறு சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு ஓய்வுபெற ஐந்து ஆண்டுகளுக்குள் மட்டுமே இருந்தால் அவர்கள் ஆசிரியர்களாக தொடரலாம். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடிய வாய்ப்பிருக்கும் ஆசிரியர்கள் கட்டாயம் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி வெற்றிபெற வேண்டும் இல்லையென்றால் அவர்களை வேலையிலிருந்து வெளியேற்றலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம்’ எனத் தீர்ப்பளித்து சிறுபான்மை நிறுவனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா? அல்லது நடைமுறை உரிமைகளை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் குழுவுக்கு பரிந்துரைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தமிழக ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நடைமுறை வந்தால் பணிநிலைத்தன்மை மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்த நிலையில், தமிழக ஆசிரியர்களின் நலன்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ஏற்கெனவே பல ஆண்டு அனுபவம் உள்ள ஆசிரியர்களுக்கு மீண்டும் ஆசிரியர் தேர்வு எழுதும்படி கட்டாயப்படுத்துவது நடைமுறைக்கு முரணானது. அவர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் தனி விதிமுறைகள் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.