நாடு முழுவதும் பூதாரகரமாகியுள்ள தெரு நாய்கள் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உத்தரவில், தெரு நாய்களை பிடித்து உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என்று கூறியிருந்தது. 

Advertisment

மேலும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில்அடைத்து வைக்க வேண்டும் என்றும் தெருவோர நாய்களுக்கு உணவளிக்கக் கூடியவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே உணவுகளை அளிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த வழிமுறைகளை வகுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது தெருநாய்கள் விவகாரத்தில் மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

Advertisment

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, டெல்லி, தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை தவிர தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தாக்கல் செய்யாத மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுடைய தலைமைச் செயலாளர்கள் வரும் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று (01-11-25) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளதாகவும், நாய்கள் கருத்தடை திட்டத்திற்காக 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி தரப்பட்டுள்ளதாகவும், 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment