தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் ஆகியவற்றை பாதிப்புக்குள்ளாக்கி, மனித குலத்திற்கும் கால்நடைகளுக்கும் கேடு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட பல்வேறு நபர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

Advertisment

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பல காலங்களாக நடைபெற்று வந்த நிலையில், பல்வேறு வாயிதாக்களை, விசாரணைகளை, ஆய்வுகளை, உத்தரவுகளை, இடைக்கால தடை என பல நிலைகளை தாண்டி நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் என்.சதீஷ்குமார், என்.மாலா ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் மீண்டும் 2022ம் ஆண்டு விசாரணைக்கு வந்து, சீமைக்கருவேலம் உள்ளிட்ட அந்நிய மரங்களை அகற்றி, சுற்றுச்சூழலை மீட்டெடுக்க அரசு பிறப்பித்த அரசாணை வரவேற்று, சீமைக்கருவேல மரங்களை இயந்திரம் மூலமாக அகற்றி வருவதோடு, ரசாயன முறையிலும் அழிக்கும் பணி முன்னேற்றத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தது.

Advertisment

அதன்பிறகு, கடந்த 2015-ம் ஆண்டு முதல் சீமைக்கருவேல மரங்களை அகற்ற உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்த போதிலும் அந்த உத்தரவுகள் இதுவரையில் அமல்படுத்தவில்லை என ஆதங்கம் தெரிவித்து இறுதியாக 10.10.2025 உத்தரவுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, பின்னர் சென்னை முதன்மை அமர்வு என சுமார் 50 வாய்தாக்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டின் உள்ள அனைத்து அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து இவ்வழக்கில் செயல்பட்டனர். வழக்கில் 744 பிரதிவாதிகள் சேர்க்கப்பட்டு ஒரு மாபெரும் இயக்கமாக நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று (06-03-26) சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வு முன்பு வந்தது. அப்போது, சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க தயார் என தமிழக அரசு உறுதி அளித்தது. அதனை தொடர்ந்து, மரங்கள் முழுவதும் அகற்றப்படும் வரை நீதிமன்றம் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என வைகோ தரப்பில் கூறப்பட்டது. இதன் மூலம் விரைவில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்படும் என்று கருதப்படுகிறது.

Advertisment