உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் வருடந்தோறும் பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி போகி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாளான 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாள் (ஜனவரி 16) மாட்டுப் பொங்கல், அதனைத் தொடர்ந்து ஜனவரி 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் விருது, பெரியார் விருது, அம்பேத்கர் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, காமராஜர் விருது, திருவிக விருது உள்ளிட்ட பெயர்களில் விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் விருது தாழ்த்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்காக செயல்படுபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 27 பேருக்கு அம்பேத்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக உள்ள சிந்தனை செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா விருது திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவை முன்னவராக இருந்து சட்டமன்றத்தின் கண்ணியத்தைக் காக்கும் துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாகவும், இலக்கியம், அரசியல் என எப்பொருளிலும் மணிக்கணக்கில் உரையாற்றும் ஆற்றல் பெற்றவர் துரைமுருகன் என குறிப்பிடப்பட்டு அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் விருது எழுத்தாளர் விடுதலை விரும்பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியார் விருது அருள்மொழிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காமராஜர் விருது தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவையின் தலைவராக இருக்கும் எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் விருது சக்திவேல் முருகனாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் விருது நெல்லை ஜெயந்தாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கவிஞர், பாடலாசிரியர் யுகபாரதிக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட இருக்கிறது. தமிழ்த் தென்றல் திருவிக விருது முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கி.ஆ.பெ.விசுவநாதம் விருது செல்லபாபுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/12/tn-sec-2026-01-12-22-06-48.jpg)