உயர் நீதிமன்றம் போட்ட தடை; உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!

supremecourt

Tamil Nadu government approaches Supreme Court against High Court ban

தமிழக அரசு சார்பில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த திட்டம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முன்பு கடந்த 1ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, ‘உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசுத் திட்டத்தின் பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது ஆகும்.

எனவே தமிழக அரசு புதிதாகத் தொடங்க உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வருடைய புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது. அதே சமயம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை கோரி அதிமுக அளித்த புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது” என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தமிழக அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வர் பெயர், புகைப்படம் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்பு தமிழக அரசு முறையீடு செய்தது. இதனை கேட்டுக்கொண்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு, இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளது.

high court Supreme Court tamilnadu goverment ungaludan stalin
இதையும் படியுங்கள்
Subscribe