தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தையொட்டி தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, இலவச வேட்டி, சேலைகள் மற்றும் ரொக்கப் பணம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.
பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/ வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959/- செலவில் வழங்கப்படும். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/04/tamilnadugovernment-2026-01-04-12-25-52.jpg)