மூத்த பத்திரிகையாளர்கள் தி வயரின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் ஆலோசனை ஆசிரியர் கரண் தாப்பர் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் நிகழ்ந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் அஜித் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் சென்னை எழும்பூரில் தமிழ்நாடு டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.  

Advertisment

இந்த நிகழ்வை தமிழ்நாடு டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைமை அமைப்பாளரான பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி ஒருங்கிணைத்தார். தி இந்து குழுமத்தின் என். ராம், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால்,  சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் வேதநாயகம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுச் செயலாளர் ஹசீப்  உள்ளிட்ட பிரபல மூத்த பத்திரிகையாளர்கள் பங்கேற்று உரையாற்றினர்.

‘சேவ் ஜர்னலிஸ்ட்ஸ், சேவ் டெமாக்ரசி’ மற்றும் ‘அபாலீஸ் பிஎன்எஸ் 152’ போன்ற பதாகைகளை ஏந்திய அவர்கள் பாஜக தலைமையிலான அரசு நடத்தும் பத்திரிகையாளர்கள் மீது தொடர்ச்சியான அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். குறிப்பாக, மூத்த பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர் மற்றும் சித்தார்த் வரதராஜன் மீது தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையும், எஸ்ஐஆர் செயல்பாட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அஜித் மீதான வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் கண்டித்தனர்.

போராட்டத்தில் பேசிய சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் வேதநாயகம், ஐபிசி 124(A) பயன்பாட்டைத் தடை செய்த உச்சநீதிமன்றம், பிஎன்எஸ் 152 ஐ ஏன் தடை செய்யவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசியதோடு, பாஜக நீதித்துறை உத்தரவுகளை புறக்கணித்ததாகக் குற்றம் சாட்டினார். தமிழ்நாடு டிஜிட்டல் பத்திரிகையாளர்கள் சங்கத்திற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் ஆதரவை வழங்கினார்.

Advertisment

மூத்த பத்திரிகையாளர் என்.ராம் பேசுகையில், 'பத்திரிகையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த வழக்குகள் தொடுக்கப்படுகிறது. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர் நக்கீரன் கோபால். அவர் போன்று பல சட்ட வழக்குகளை வேறு எந்த இந்திய பத்திரிகையாளரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டார்.

நக்கீரன் ஆசிரியர் பேசுகையில், 'பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு கோட்டையாக தமிழ்நாடு உள்ளது. அடக்குமுறை நடவடிக்கைகள் திரும்பப் பெறப்படும் வரை தனது முழு ஆதரவு இருக்கும்'' என்றார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் அசாம் காவல்துறையின் நடவடிக்கையைக் கண்டித்திருந்தார். எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 152 சுயாதீன பத்திரிகையை நசுக்குவதற்காக ரத்து செய்யப்பட்ட தேசத்துரோகச் சட்டத்திற்கு மாற்றாக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது' என்று கூறியிருந்த முதல்வர், கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது' என்று தெரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.