'Tamil Nadu Chief Minister is discriminating against people' - Tamilisai alleges Photograph: (bjp)
''செந்தில் பாலாஜி எந்த வாஷிங்மெஷினில் போட்டு எடுத்தீர்கள். எதில் போட்டு சுத்தப்படுத்தினீர்கள். இதே செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது யார்?" என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''அனைவருக்கும் குறிப்பாக தமிழக முதலமைச்சருக்கும், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் எங்களுடைய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஒப்புக்கொண்டாலும் அவர்கள் அடிப்படையில் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். நாங்கள் அவர்களை மாதிரி நம்பிக்கை உள்ளவர்களுக்கும் மட்டும் வாழ்த்து என்று சொல்ல மாட்டோம். உதயநிதியை நான் கடுமையாக கண்டிக்கிறேன். மற்ற மத விழாக்களுக்கு வாழ்த்து சொல்லும் பொழுது அந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு நீங்கள் வாழ்த்துக்கள் சொல்லவில்லை. ஆனால் இந்து மதம் என்று வருகின்ற பொழுது மட்டும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் வாழ்த்துகிறேன் என்று சொல்கிறீர்கள்.
இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களை வேறுபடுத்தி பார்ப்பது இல்லை. ஆனால் தமிழக முதலமைச்சர் வேறுபடுத்தி பார்த்து இந்துக்களுக்கு நாம் வாழ்த்து சொல்ல தேவையில்லை என்ற அளவிற்கு பாகுபடுத்தி பார்க்கிறீர்கள். நீங்கள் என்ன சமூக நீதியை கடைப்பிடிக்கிறீர்கள். சட்டமன்றத்தில் எங்கள் சட்டமன்ற உறுப்பினர் கேட்டதற்கு பின்பும் அவை குறிப்பில் இருந்து அது நீக்கப்பட்டு இருக்கிறது. இது எப்படி சரியாக இருக்கும். இந்துக்கள் இதற்கு பதில் சொல்வார்கள். நம்பிக்கை இருக்கோ இல்லையோ நம்பிக்கை இருப்பவர்களும் ஓட்டு போட்டார்கள். நம்பிக்கை இல்லாதவர்களும் உங்களுக்கு ஓட்டு போட்டார்கள் இல்லையா? அதனால் தமிழக அரசு நடந்து கொள்வது நிச்சயமாக இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கு எதிரானது. இந்து மத நம்பிக்கைக்கு எதிரானது. நாட்டு மக்களின் கலாச்சாரத்திற்கே இது எதிரானது.
அதேபோல மத்திய அரசு ஒரு ரூபாய் கூட எங்களுக்கு கொடுக்கவில்லை ஒரு ரூபாய் கூட எங்களுக்கு கொடுக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருவதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும். தணிக்கை அறிக்கை என்ன சொல்கிறது என்றால் 7500 கோடிக்கு மேல் தமிழக அரசுக்கு கல்வி திட்டத்திற்கு உட்பட நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது சென்ற ஆண்டை விட 40 சதவீதம் அதிகம். மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட 12 000 கோடி நிதி தமிழக அரசால் செலவிடப்படவில்லை இதற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டும். பாஜகவுக்கு வந்த உடன் எல்லோரும் சுத்தமாகி விடுவார்களா என கேள்வி கேட்கிறார். செந்தில்பாலாஜியை எந்த வாஷிங்மெஷினில் போட்டு எடுத்தீர்கள். எதில் போட்டு சுத்தப்படுத்தினீர்கள். இதே செந்தில் பாலாஜி மீது வழக்கு போட்டது நீங்கள்''என்றார்.