அப்பல்லோவில் மருத்துவச் சிகிச்சையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ஓரணியில் தமிழ்நாடு' நிலவரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுக மண்டலப் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வழக்கமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சியில் கடந்த 21ஆம் தேதி (21.07.2025) ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் 3 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் அறிவுறுத்தியதால் அவரின் திருப்பூர் பயணம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர், அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதோடு முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தும் வருகிறார். இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஆலோசிக்க திமுக மண்டலப் பொறுப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். இதில் 'ஓரணியில் தமிழ்நாடு' நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாகவும், இதற்காக தான் சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருமாறு திமுக மண்டலப் பொறுப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.