சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் புதிய இருதய சிகிச்சை பிரிவு கட்டிடத்தை  தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்து 3 மாவட்ட மக்களின் பல ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றியுள்ளார்.

Advertisment

சிதம்பரம் அண்ணாமலை நகரில் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையை கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் பகுதியில் வசிக்கும் பொது மக்கள் பயன்படுத்தி வந்தனர். இங்கு பல்லாண்டு காலமாக இருதய சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவர்கள் இல்லை என்றும் உடனடியாக இதனை அமைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.  மேலும் இங்கு வரும் இருதய நோயாளிகளை புதுச்சேரி மற்றும் சென்னை பெருநகரங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Advertisment

இந்த நிலையில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில்  ரூ 7.5 கோடி மதிப்பீட்டில் இருதய சிகிச்சை பிரிவு கட்டிடம் மற்றும் அதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி பணிகள் முடிந்து தயார் நிலையில் இருந்தது.  இதனை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதனை மருத்துவமனை கட்டிடத்தில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவருடன் மருத்துவ கல்லூரியின் முதல்வர் மகேந்திரன், முன்னாள் முதல்வர் திருப்பதி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜூனியர் சுந்தரேசன், துணை முதல்வர் பாலாஜி சாமிநாதன், குழந்தை நல மருத்துவர் ராமநாதன், மயக்கவியல் மருத்துவர் சரவணன் உள்ளிட்ட மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வருக்கும், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து கல்லூரியின் முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த மருத்துவமனையில் இலவசமாக ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோ பிளாஸ்டிக் போன்ற உயரிய சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். இது தனியார் மருத்துவமனையில் இரண்டு முதல் மூன்று லட்சம் வரை செலவாகும் இதனை ஏழை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Advertisment