சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை சார்பாக அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்திற்கான அழைப்பு கொடுக்கப்படுவது வழக்கம். இந்த வருடமும் அழைப்பு கொடுக்கப்பட்ட நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்திருந்தன. இந்நிலையில் தமிழக முதல்வரும் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பை புறக்கணித்துள்ளார்.

Advertisment

சட்டப்பேரவையில் கடந்த 24/04/2025 அன்று பள்ளி கல்வித் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்ற போது பல்வேறு கட்சிகள் இணைந்து, “தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்” அமைக்க வேண்டும் என கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர். இது குறித்து பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து பேசினார்கள். இதையடுத்து கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட மசோதாவானது தமிழக சட்டப்பேரவையில் முறையாக நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதேபோல் துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இந்த மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திருந்தார். 

தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிரான ஆளுநரின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் தமிழக முதல்வரும் ஆளுநரின் தேநீர் விருந்து அழைப்பைப் புறக்கணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.