Tamil Nadu Chief Minister announces relief amount for north indian labour lost in Ennore accident
சென்னை எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உயர அனல் மின் திட்ட கட்டுப்பானப் பணிகள் ஊரணம்பேட்டு பகுதியில் நடந்து வருகிறது. இதில், தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி உள்ள இரண்டு அலகுகள் மூலம் 1320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலைய பணிகள் கிட்டத்தட்ட 70% முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், இன்று மின் நிலையத்தில் பிரமாண்ட ராட்சத வளைவு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதில் ஒரு கட்டமாக, கிட்டத்தட்ட 30 அடி உயரத்தில் இருந்து 10க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அப்போது, திடீரென முகப்பு சாரம் சரிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இந்த பெரும் விபத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ளா ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தற்போது வரை 9 தொழிலாளர்கள் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உயிரிழந்த 9 வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு அவர்களுக்கு நிவாரணத் தொகையையும் அறிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘எண்ணூரில் பெல் (BHEL) நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மின்துறை அமைச்சர் சிவசங்கரையும், தமிழ்நாடு மின் வாரிய நிறுவன தலைவரான ஐ.ஏ.எஸ் அதிகாரி ராதாகிருஷ்ணனையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 இலட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.