Advertisment

தாம்பரம் - மதுரவாயில் பைபாஸ் சாலை; அலட்சியத்தால் ஏற்படும் உயிர் இழப்பு!

Untitled-1

தாம்பரம் - மதுரவாயில் பைபாஸ் சாலையில் போரூர் டோல்கேட்டை நோக்கி இன்று அதிகாலை 11:30 மணி அளவில் கருப்பு நிற பல்சர் பைக் சாலை ஓரம் சென்று கொண்டு இருந்தது. இரும்புலியூரைக் கடந்து திருமுடிவாக்கம் அருகே பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த பைக் சாலையில் அத்துமீறி கொட்டப்பட்டிருந்த எம் சாண்டின் மீது ஏறி நிலை தடுமாறி சாலையில் விழுந்த பைக் ஓட்டுநர் மீது அடையாளம் தெரியாத பத்து டயர் கொண்ட டாரஸ் லாரி (காங்கிரீட் ரெடிமிக்ஸ்) அந்த நபர் மீது தலைக்கவசத்தையும் மீறி தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.  

Advertisment

இதைக்கண்ட அந்த வழியே வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். சிலர் அவர்கள் வந்த வாகனத்தையும் ஓரம் கட்டி இரத்த வெள்ளத்தில் கிடந்த விபத்தில் பலியான அந்த நபரின் மீது பிளாஸ்டிக் துணியை கொண்டு மூடினர். மற்ற வாகனங்கள் விபத்து ஏற்படாத வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்தி சாலையில் கொட்டியிருந்த மண்ணையும் ஓரம் கட்டினர். பின்னர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது, விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் பரிசோதித்ததில் விபத்தில் சிக்கிய அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிர் பிரிந்து விட்டதால் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் ஹைவே பேட்ரோலுக்கும் தகவல் கொடுத்தனர். 

Advertisment

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய டாரஸ் (ரெடிமிக்ஸ்) வாகனத்தை சில வாகன ஓட்டிகள் துரத்திச் சென்று போரூர் டோல்கேட்டில் மடக்கிப் பிடித்தனர்.   அந்த வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநரை கீழே இறக்கி பொதுமக்கள் கேள்வி கேட்ட பொழுது பயத்தில் வாகனத்தை நிறுத்தாமல் வந்ததாக தெரிவித்தார். அந்த டாரஸ் லாரியின் பின்பக்கம் நம்பர் பிளேட்டும் கிடையாது. ஓட்டி வந்த ஓட்டுநர் சீருடையில் இல்லை. மேலும், அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போரூர் டிராபிக் உதவி ஆய்வாளர் பார்த்திபனிடம் பொதுமக்கள்  அந்த ஓட்டுநரைப் பிடித்து ஒப்படைத்தனர். 

பின்னர் விசாரணையில் அந்த டாரஸ் வாகனம் பிரபல மருத்துவமனைக்கு சொந்தமானது என்றும் அந்த வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி ஆகியுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது. விபத்தில் பலியான நபர் யார் என்று அவர் ஓட்டி வந்த பைக்கின் வாகன பதிவெண்ணை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  மேலும் தாம்பரம் - மதுரவாயில் பைபாஸ் சாலையில் பராமரிப்பு மற்றும் ஹைவே பாதுகாப்பு போலீசார் அலட்சியத்தால் இது போன்று விபத்துகள், வாகன நெரிசல் ஆம்னி பஸ்கள் ஆக்கிரமிப்பு வழியில் கனரக வாகனங்களை நிறுத்தி டீசல் திருடும் கும்பல் மற்றும் பாலியல் குற்றங்கள் ஏற்படுகின்றது. 

சில மாதங்களுக்கு முன்பு இந்த பைபாஸ் சாலையில் சட்ட விரோதமாக பாலியல் தொழில் செய்யும் கும்பல் பிடிபட்ட செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கடந்த அக்டோபர் 13-ந் தேதி மாங்காட்டைச் சேர்ந்த முகமது சித்திக் உசேன் என்ற 33 வயதுடைய ஐடி ஊழியர் பணிமுடித்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சாலையில் படுத்திருந்த எருமை மாட்டின் மீது ஏற்றி விபத்துக்குள்ளாகி பலியான சம்பவத்தை தொடர்ந்து தற்போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாம்பரம் - மதுரவாயில் 32 கி.மீ. தொலைவுள்ள இந்த பைபாஸ் சாலையில் நாளொன்றுக்கு பல்லாயிரம் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பைபாஸ் சாலையில் போரூர் மற்றும் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் நாளொன்றுக்கு வாகன ஓட்டிகளிடமிருந்து பல லட்சம் ரூபாய் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு வசதிகளை சுங்கக் கட்டணம் வசூலிக்கும் குத்தகைதாரர்கள் செயல்படுத்துவதில்லை என்ற புகார்கள் பொதுமக்களிடையே கூறப்படுகிறது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் போன்றவர்களின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. இதை கண்காணிக்கும் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத் துறை, காவல்துறை ஆகியவை செயலற்று கிடப்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்த பைபாஸ் சாலையில் தாம்பரம் - போரூர் மற்றும் மாதவரம் போக்குவரத்து போலீசார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்யாத காரணத்தால் அலட்சியத்தில் இது போன்ற எதிர்பாராத விபத்துகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது.

tambaram accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe