ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைபற்றிய பிறகு முதல் முறையாக தாலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்திருப்பது உலக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Advertisment

கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றினர். அமெரிக்கா தலைமையிலான படைகள் வாபஸ் பெறப்பட்டு காபூல் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர். நான்கு ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில், ரஷ்யாவைத் தவிர எந்த நாடும் தாலிபான்களின் அரசை அங்கீகரிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் முதலீடுகள் செய்திருந்த நிலையில், தாலிபான்கள் கைப்பற்றியது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்தன.

Advertisment

இந்தியா உள்ளிட்ட நாடுகள், தாலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலை அளித்து வந்தன. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தகிக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. அந்த வரவேற்பை ஏற்று அந்த அமைச்சரும் அரசு பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்த நிலையில், 6 நாள் அரசு பயணமாக ஆப்கானிஸ்தான் அமைச்சர் அமீர் கான் முத்தகி இன்று (09-10-25) இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவருக்கு பயண விலக்கு அளித்ததை தொடர்ந்து இன்று அவர் இந்தியா வந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisment

ஆப்கானிஸ்தான் அமைச்சரின் இந்தியா பயணம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, “இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து அவருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். முத்தாகிக்கு அன்பான வரவேற்பு” எனத் தெரிவித்துள்ளார். தாலிபான்கள் அரசாங்கத்துடன் உறவு மேம்படுத்துவதால், நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுக்கும் மறைமுக சமிக்ஞையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.