கார்த்திகை ஒன்றான இன்று சபரிமலையில் நடை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் ஐயப்ப பக்தர்கள் இன்று மாலை அணிய தொடங்கியுள்ளனர். தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்வதற்கு ஏதுவாக சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Advertisment

கார்த்திகை மாதங்களில் சபரி மலை சீசன் தொடங்குவதால் பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டுள்ளது. சபரி மலை நடையை அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்து புதிய மேல்சாந்தி பிரசாந்த் நம்பூதிரியிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜை வரும் டிசம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுவரை 22 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாகனம் பார்க்கிங், ஸ்பாட் புக்கிங் என கூட்ட நேசரிசலை கட்டுப்படுத்த கோவில் நிர்வாகமும், கேரள அரசும் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. 18,741 காவலர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். 

Advertisment

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை கோவில் நிர்வாகம் விதித்துள்ளது. குறிப்பாக 18 ஆம் படிமேல் உள்ள சன்னிதானத்தில் செல்போன் மற்றும் புகைப்படக் கருவிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பம்பை நதியில் குளிக்கும் போது இருவிரலால் மூக்கைப் பொத்திக்கொண்டு குளிக்கும்படி கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கேரளாவில் நீர்நிலைகள் மூலம் பரவி வரும் மூளையை தின்னும் அமீபா தொற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் இன்று முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.