தூத்துக்குடி மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்தவர் மகாராஜா. இவரது மனைவி வனத்தாய். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த நிலையில், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதியினருக்கு இரு மகள்கள் உள்ளனர், இருவரும் அருகே உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் பெறுவதற்காக மகாராஜா, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். மேலும், அந்த விண்ணப்பத்தில், மகாராஜாவின் சமூகத்தின் பேரில் சாதி சான்றிதழ் வழங்கும்படி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், மகாராஜாவுக்கு சாதி சான்றிதழ் இல்லை என்பதால், உறவினரான அவரது பெரியப்பா மகனின் சாதி சான்றிதழை ஆதாரமாக இணைத்து, தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் இந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தனர். மேலும், இறுதி ஒப்புதலுக்காக தாசில்தாரை அணுகுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, கடந்த 19-ஆம் தேதி வனத்தாய், கோவில்பட்டி தாலுகா அலுவலகத்திற்கு சென்று தாசில்தார் பாலசுப்பிரமணியனிடம் தனது கோரிக்கை மனு குறித்து கேட்டிருக்கிறார். ஆனால், இதனை அலட்டிகொள்ளாத தாசில்தார் பாலசுப்பிரமணியன், காலை 10 மணிக்கு சென்ற வனத்தாயை மதியம் வரை, வெளியே காத்திருக்க வைத்திருக்கிறார். மதிய உணவு கூட சாப்பிடாமல் வெளியே காத்திருந்த வனத்தாய், பொறுமையை இழந்து, மதியம் 3 மணிக்கு உள்ளே சென்று மனு குறித்து மீண்டும் கேட்டிருக்கிறார்.
அப்போது, “கலப்புத் திருமணம் செஞ்சிருக்க, உனக்கு வெட்கமாக இல்லையா? அதுவும் தாழ்ந்த சாதிக்காரன திருமணம் செஞ்சிருக்க. உன் கணவர் சாதியில குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் தரமாட்டேன். வேண்டுமென்றால், உன் சாதியில சான்றிதழ் தருகிறேன்” என்று அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. தாசில்தாரின் பேச்சால், வனத்தாயும் அவரது கணவர் மகாராஜாவும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மகாராஜா, வனத்தாய் மற்றும் சமூக ஆர்வலர்கள், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தாசில்தாரின் செயலை கண்டித்து, கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின்னர், இது தொடர்பான புகார் மனுவை கோட்டாட்சியரிடம் வழங்கினர். அதனைப் பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்திய அளவில் சாதி மறுப்பு திருமணங்கள் 10 சதவீதம் மட்டுமே நடைபெறுகின்றன என்றும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் 3 சதவீதம் மட்டுமே நடைபெறுகின்றன என்று 2015-ல் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த எண்ணிக்கையை உயர்த்த, தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அது மட்டும் போதாது. கலப்புத் திருமணங்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரிகள், காவல்துறையினர், திருமணப் பதிவாளர்கள், சாதிச் சங்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் பாலசுப்பிரமணியன் போன்ற சாதிப் பாகுபாடு காட்டும் அதிகாரிகளை அரசு இயந்திரத்திலிருந்து அகற்றி, சமத்துவமான சமூகத்தைக் கட்டமைக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/07/23/103-2025-07-23-12-42-56.jpg)