திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் உழவர் பாதுகாப்பு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். இவரது மனைவி மலர். இந்த தம்பதிக்கு சேகர் என்ற மகன் உள்ளார். கடந்த மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மலர்.. திடீரென இயற்கை மரணம் அடைந்தார். இதனால் இவர்களுடைய குடும்பம் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த சூழலில், கணவர் சேகர் உழவர் பாதுகாப்பு கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளார். 

Advertisment

இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இயற்கை மரணம் அடைந்தால், அவர்களின் ஈமச்சடங்குகளை செய்வதற்காக அரசு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த தொகையை பெறுவதற்காக மலரின் மகன் சேகர், நாட்றம்பள்ளி சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியரான வள்ளியம்மாவிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட வள்ளியம்மாள்.. சேகரிடம் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது.

Advertisment

தன்னுடைய தாயின் ஈம சடங்கிற்கும் லஞ்சம் கேட்கிறார்களே என சேகர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், லஞ்சம் பெறுவது சட்டவிரோதமானது என்பதை புரிந்துக்கொண்ட சேகர், இதுகுறித்து திருப்பத்தூர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராஜு, ஆய்வாளர் கௌரி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் இந்த புகாரை விசாரிக்க தொடங்கினர்.

அப்போது, அவர்கள் சேகரிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சம் கேட்ட தனி வட்டாட்சியர் வள்ளியம்மாளிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தினர். அதன்படி வள்ளியம்மாள் பணத்தை பெற்றபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அப்போது, சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வள்ளியம்மாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த நேரத்தில், தனி வட்டாட்சியருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Advertisment

ஈமச்சடங்குக்காக அரசு அளிக்கும் 25 ஆயிரம் ரூபாயை பெறுவதற்காக வந்த இளைஞரிடம் லஞ்சம் பெற்ற தனி வட்டாட்சியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, தனி வட்டாட்சியர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் உள்ளே செய்தியாளர்கள் வருவதை தவிர்க்கும் வகையில், விஜிலென்ஸ் பெண் கான்ஸ்டபிள் ஷாலினி என்பவர் மருத்துவமனை வளாக கதவை பூட்டியுள்ளார். இதனால் வெளியில் இருந்தபடி செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப தொடங்கினர்.

இதை கண்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவர் உதயகுமார் கதவை பூட்டிய அதிகாரி யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், இது மிகவும் தவறான செயல். சம்பவத்துக்கும் மருத்துவமனை நிர்வாகத்துக்கும் எந்த தொடர்பில்லை. அப்படி இருக்க எங்களது சம்மதமின்றி கதவை ஏன் மூடினார்கள் என கேட்க, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.