140 கோடி மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு  எதிராக ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பன்ருட்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், “ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு மாற்றம் செய்யப்பட்ட நெல் வகைகள், இந்திய பெருநிலத்தின் விவசாயத்திற்கும், 140 கோடி மக்களின் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஒன்றிய மோடி அரசு எதிராக செயல்படுகிறது. இந்திய விவசாயிகளின் வாழ்வும், பாரம்பரிய விதைப்பாணியும், நம் தமிழ்ச் சமூகத்தின் உணவுப் பாதுகாப்பும் ஆபத்துக்குள்ளாகும் சூழலை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது.

Advertisment

சோதனைக் கூடங்களில் கூட பரிசோதிக்கப்படாத விதைகளை ‘மரபணு மாற்றம்’ என்ற பெயரில் நேரடியாக விவசாயத்தில் விதைக்க முயல்வது, விவசாயிகளின் உயிரோடும், மக்களின் உயிரோடும், விளையாடும் குற்றச்செயல் ஆகும். இது மண்ணையும், மக்களையும் மலடாக்கும் இயற்கைக்கும் எதிரான செயலாகும். விவசாயிகள், ஆய்வுக்கூட எலிகள் அல்ல. பல தலைமுறைகளாக பாதுகாக்கப்பட்ட பாரம்பரிய நெல் வகைகளை அழித்து, தனியார் நிறுவன விதைகளுக்கு விவசாயிகளை அடிமைப்படுத்தும் முயற்சியே இந்த திட்டம். இது முழுமையாக பன்னாட்டு நிறுவனங்களின் சதி. வெளிப்படைத்தன்மை இல்லாமல், நீண்ட கால ஆராய்ச்சி முடிவுகள் இல்லாமல், மக்களிடமும் விவசாயிகளிடமும் ஆலோசிக்காமல், இத்தகைய ஆபத்தான நெல் வகைகளை அறிமுகப்படுத்தும் ஒன்றிய அரசின் செயலை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

விவசாயம் நமது உயிர். அதை வணிக லாபத்துக்காக அழிக்கும் எந்த முயற்சியையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடுமையாக எதிர்க்கும். விவசாயிகளின் விதைப்பாணி உரிமை (Seed Sovereignty) பாதுகாக்கப்பட வேண்டும். பாரம்பரிய விதைகளைப் பாதுகாப்பதும், விவசாயிகள் நலனையும், மக்களின் உணவு பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதும் தான், உண்மையான மக்களாட்சியின் பொறுப்பு. எனவே, ஒன்றிய அரசு அறிவித்துள்ள மரபணு மாற்ற நெல் வகைகளை, ஒன்றிய அரசு, உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.