“வெளி மாநிலத்தவருக்கு வரம்பு கட்டும் வகையில் உள் நுழைவு அனுமதிச் சட்டம் கொண்டு வர வேண்டும்” - தி. வேல்முருகன்!

velmurugan-tvk

தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு வரம்பு கட்டும் வகையில் உள் நுழைவு அனுமதிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பன்ருட்டி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான வேல்முருகன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், “பீகார் மாநிலத்தவர்கள் 6.5 இலட்சம் பேரை தமிழ்நாடு வாக்காளர்களாக்க திட்டம் : தமிழர்களின் வாழ்வுரிமையையும், தமிழர் தாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது. பாஜக ஒன்றி அரசு சமீபத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை கொண்டு வந்த நிலையில், முதற்கட்டமாக இந்த திருத்தம் பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பீகாரில் வசிக்கும் மக்கள், வாக்காளர் பட்டியல் இடையே உள்ள வேறுபாடுகள் சரிசெய்யப்பட்டு வருகிறது. தற்போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் உள்ள சுமார் 6.5 இலட்சம் பேர், தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்து விட்டதால், அவர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர். இந்த சிறப்பு திருத்தம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டால், பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு கோடி பேர் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இம்மாநில வாக்காளர்களாக கருதப்படுவர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் மிகப்பெரும் எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் அலை அலையாகக் வந்திறங்குகின்றனர். தமிழ்நாட்டின் இந்திய அரசுப் பணிகளிலும், அரசுத்துறை நிறுவன வேலை வாய்ப்பிலும், உடல் உழைப்புப் பணிகளிலும் இவர்கள் பெரும் எண்ணிக்கையில் அமர்ந்து விடுகின்றனர். தமிழ்நாட்டு இளையோரின் வேலை வாய்ப்பு பறிபோகின்றது. 

குறிப்பாக, தமிழ்நாட்டின் தொழில், வணிகம், வேலை வாய்ப்பு ஆகியவை இந்திய அரசின் ஆதரவோடு வெளி மாநிலத்தவரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிப்பதோடு, தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகத் தமிழ்நாடு நீடிப்பதற்கு அச்சுறுத்தலாக இந்த ஆக்கிரமிப்பு மாறி வருகிறது. தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றுவழித் தாயகமாக தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டு, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் நாள் – ”தமிழ்நாடு” ஒரு மாநிலமாக அமைக்கப்பட்டது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு, தமிழர்களின் வாழ்வுரிமை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவே, மொழிவழி தேசிய இன மாநிலங்கள் உருவாக்கப்படுவதாக மாநிலச் சீரமைப்புச் சட்டத்தின் நோக்கவுரையில் தெளிவுபடுத்தப்பட்டது. ஆனால், அந்த நோக்கத்தைச் சீர்குலைத்து தமிழர் தாயகத்தையே கலப்பின மண்டலமாக மாற்றும் முயற்சியில் திட்டமிட்ட முறையில் இந்திய அரசு செயல்பட்டு வருகிறது. 

அந்த சூழ்ச்சியின் முதற்கட்டமாக, பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கு  புலம்பெயர்ந்துள்ள சுமார் ஒரு கோடி பேர் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இம்மாநில வாக்காளர்களாக மாற்றப்பட உள்ளனர். இவ்வாறு குவியும் வெளியார்களுக்கு இந்திய – தமிழ்நாடு அரசுகள் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுத்து அவர்களை இங்கேயே நிலைப்படுத்துகின்றன. இதனால், தமிழ்நாட்டின் இனச் சமநிலையும், தமிழ்நாட்டு அரசியலும் வெளியாரின் குறுக்கீட்டால் சீர்குலைகிறது. இவ்வாறு குவியும் வெளியார் மிகப்பெரும்பாலோர் பாரதிய சனதா கட்சியின் வாக்காளர்களாக அமைகிறார்கள். இந்தப் போக்கு தொழில் நகரங்களில் தொடங்கி இன்று கிராமங்கள் வரை விரிந்துள்ளது. தமிழர்களின் வாழ்வுரிமையையும், தமிழர் தாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால், தமிழ்நாட்டில் உள்ள வட மாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க கூடாது.

வடமாநிலத்தவர்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் இந்த நிலத்தின் அரசியலை அவன் தீர்மானித்து விடுவான். அப்படி நேர்ந்து விட்டால், ஈழத்தில் என்ன நடந்ததோ அதுவே தமிழ்நாட்டிலும் நடந்து விடும். எனவே, வெளி மாநிலத்தவருக்கு குடும்ப அட்டை – வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், தமிழ்நாட்டு அரசு வேலை வாய்ப்பில் 100 விழுக்காடும், தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காட்டு வேலை வாய்ப்புகளும் தமிழர்களுக்கே வழங்க வேண்டும். இவ்வாறு தொழில், வணிகம், வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்கும் தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வேண்டும். நாகாலாந்து – அருணாச்சலப்பிரதேசம் – மணிப்பூர் – மிசோரம் ஆகிய மாநிலங்களில் இருப்பதுபோல், இந்திய அரசு – தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவருக்கு வரம்பு கட்டும் வகையில் உள் நுழைவு அனுமதிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Bihar north indian T. Velmurugan voters
இதையும் படியுங்கள்
Subscribe