கடலூர் மாவட்டத்தில் ரூ.14.49 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட செயற்கை இழையிலான தடகள ஓடுபாதை அமைக்கும் பணிக்கு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

Advertisment

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணியின் தொடக்க விழா கடலூர் மஞ்சக்குப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கம் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

Advertisment

மாவட்ட ஆட்சித்தலைவர் கூறுகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல விளையாட்டு வீரர்களை உருவாக்கியுள்ள இவ்விளையாட்டு அரங்கில் ஹாக்கி, பேட்மிட்டன், டேக்வோண்டோ, பாக்சிங், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிய செயற்கை இழை ஓடுபாதை மாவட்ட இளைஞர்கள் மற்றும் தடகள வீரர்களின் திறனை மேம்படுத்தி, பன்னாட்டு சாதனைகள் படைக்க உதவும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.