சஸ்பெண்ட் செய்யப்பட்ட வி.ஏ.ஓ மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் ஈ.சி.ஆர் கடற்கரை சாலை ஓரத்தில் உள்ள வயல்வெளியில் இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்கள், உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகம் சிதைந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அதனை தொடர்ந்து, சடலமாக கிடந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் வாழக்கரை பகுதியைச் சேர்ந்த ராஜாராமன் (38) என்பதும் திருவாய்மூர் ஊராட்சியில் வி.ஏ.ஓவாக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

கடந்தாண்டு எட்டுக்குடி கிராமத்தில் பொறுப்பு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய போது அவர், லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் கடந்த 2024ஆம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சூழ்நிலையில், லஞ்சம் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜாராமன் மாலை வரை திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலையில் மர்மமான முறையில் ராஜாராமன் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisment

இந்த கொலை சம்பவத்தில் ராஜாராமனுக்கு ஏதேனும் முன்விரோதம் இருக்கிறதா? அந்த தொடர்பில் இந்த கொலை நடந்திருக்கிறதா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.