இந்திய உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பதவி வகித்து வந்தார். கடந்த மே  மாதம் 14ஆம் தேதி தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பி.ஆர்.கவாய், கடந்த 21ஆம் தேதியுடன் (21.11.2025) பணி ஓய்வு பெற்றார். முன்னதாக, தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி சூர்யகாந்தை, தலைமை நீதிபதியாக நியமிக்க, பி.ஆர்.கவாய் கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தார். இது தொடர்பான கடிதத்தை மத்திய அரசுக்கு பி.ஆர்.கவாய் வழங்கினார். அந்த கடிதத்தை, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக மத்திய அரசு அனுப்பியது. 

Advertisment

அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஏற்று புதிய தலைமை நீதிபதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி சூர்யகாந்த், உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக இன்று (24.11.2025) பதவி ஏற்றுக்கொண்டார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நீதிபதி சூர்யகாந்துக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், சட்டத்துறை சார்ந்த நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து  தலைமை நீதிபதி சூர்யா காந்த், முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயுடன் கைக் குலுக்கி ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.   

Advertisment

தலைமை நீதிபதியாகப் பதவியேற்றுள்ள சூர்யகாந்த் கடந்த 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதியன்று ஹரியானா மாநிலத்தின் பெட்வார் கிராமத்தில் உள்ள நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். கடந்த, 1981ஆம் ஆண்டு ஹிசாரில் உள்ள அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, 1984இல் ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அதே ஆண்டில் ஹிசார் மாவட்ட நீதிமன்றங்களில் தனது சட்டப் பயிற்சியைத் தொடங்கினார். 1985ஆம் ஆண்டு சண்டிகரில் உள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாறிய அவர், அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றார். 

sc-cji-suryakanth

ஜூலை 7, 2000ஆம் ஆண்டின் ஹரியானாவின் இளைய அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மேலும், அங்கு மூத்த வழக்கறிஞராகவும் மாறினார். அட்வகேட் ஜெனரலாக பணியாற்றிய அவர் ஜனவரி 9, 2004ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். நீதிபதியான அவர், 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (NALSA) நிர்வாகக் குழுவில் பணியாற்றினார். 

Advertisment

அதன் பின்னர், அவர் 2011 ஆம் ஆண்டு குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றதோடு மட்டுமல்லாமல் வகுப்பில் முதலிடம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 5, 2018 அன்று இமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், மே 24, 2019 அன்று இந்திய உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார். மே 4, 2025 முதல், அவர் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும், இந்தியச் சட்ட நிறுவனத்தின் பல குழுக்களிலும் பணியாற்றி வருகிறார்.