‘ஓரணியில் தமிழ்நாடு’; அமைச்சர் சொன்ன ஆச்சர்ய தகவல் - பக்காவாக களமிறங்கும் திமுக!

102

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுக, ‘தமிழ் காக்க, இனம் காக்க, மண் காக்க, கலாச்சாரத்தைக் காக்க ஓரணியில் தமிழ்நாடு’ என்கிற பெயரில் மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஜீலை 3 ஆம் தேதி தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கவுள்ளது. இதனை ஜீலை 1ஆம் தேதி சென்னையில்  முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்து திருவண்ணாமலை தெற்கு மா.செவும், பொதுப்பணித்துறை அமைச்சரும், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான எ.வ.வேலு செய்தியாளர்களை சந்தித்தபோது, “வேத நாகரீகம், திராவிட நாகரீகத்தில் திராவிட நாகரீகம் தான் முன்னோடி நாகரீகம் என்பதை கீழடி ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதை ஏற்றுக்கொள்ளாமல் தடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

தமிழ் மீது பற்று இருப்பதாக பேசும் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி ஆகியோர் திருக்குறள் சொல்கிறார்கள், வணக்கம், நன்றி எனச்சொல்வது எல்லாம் இந்தியில் எழுதி வைத்துப் படிக்கிறார்கள். இதுதான் அவர்கள் தமிழ் மீதுள்ள பற்று. நமக்கு அப்படியல்ல, நாம் இந்த மண்ணை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தலைவர் கலைஞர் செம்மொழி அந்தஸ்து பெற வேண்டும் எனப் போராடியபோது இந்த பாஜகவை சேர்ந்தவர்கள் எங்கே போயிருந்தார்கள். தமிழ் இனத்தைக் காக்கவும், மொழியை காக்கவும், மண்ணை காக்கவும் முதலமைச்சர் ஸ்டாலினின் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து, தமிழுக்கும், இனத்துக்கும், இந்த மண்ணுக்கும் வரும் ஆபத்து குறித்து விளக்கச்சொல்லியுள்ளார்.

தமிழர்களுக்கு மானம் பெரிது. தமிழர்களுக்கும் – வட இந்தியர்களுக்கும் உடையிலேயே வேறுபாடு உண்டு. நாம் வேட்டி – சட்டை அணிகிறோம், அவர்கள் குர்தா – பைஜாமா அணிகிறார்கள். இந்த கலாச்சாரத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். குடும்ப கட்டுப்பாடு திட்டத்தினை இந்திய அரசு கொண்டுவந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், நாம் இருவர் நமக்கு இருவர் என்றும், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று அரசின் சார்பில் பிரச்சாரம் செய்து தமிழ்நாட்டு மக்கள் தொகையை குறைக்கச்செய்தார். திமுகவின் தண்டராம்பட்டு தொகுதி எம்.எல்.ஏவாக இருநத எம்.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் வேலூர் பென்டிலேன்ட் மருத்துவமனைக்கு சென்று குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார்கள். அந்தளவுக்குத் தலைவர் கலைஞர் செயல்பட்டு மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டுவந்தார். அதனால் பொருளாதாரத்தில் முன்னேறினோம். இன்று இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் 9.69 சதவிதமாக உள்ளது. மற்ற மாநிலங்கள் எந்த நிலையில் உள்ளது. ஒன்றியரசு கொண்டுவந்த குடும்ப கட்டுப்பாடு திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்திய நமக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் 39 நாடாளுமன்றத் தொகுதியை மக்கள் தொகை குறைவாக இருக்கிறது என குறைக்கப்பார்க்கிறார்கள். இதை நாம் எப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது?

103

மொழியை, இனத்தை, மண்ணை காப்பாற்ற வேண்டிய கடமை திராவிட முன்னேற்ற கழகத்துக்கு இருக்கிறது. இதை அரசியலாக பார்க்காமல் அனைத்து தரப்பினரும் இணைந்து தமிழ்நாட்டை காக்க கைகோர்க்கவேண்டும். அதற்காகவே மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு என்பதை ஒன்றியரசுக்கு காட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பி.எல்.ஏ 2 தலைமையில் ஒவ்வொரு வாக்குசாவடி அளவில் குழு அமைக்கப்படுகிறது. இதற்காக டெக்னாலஜி அறிந்த இளைஞர் ஒருவரையும் இணைத்து அரசின் சார்பில் அவர்களுக்கு கிடைத்த நலத்திட்டங்கள், அவர்களின் கோரிக்கைகள் என ஒவ்வொன்றும் பதிவு செய்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்தப்படும்.

பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் எடப்பாடி பழனிச்சாமி சென்றுவிட்டார். தன் இருப்பை வெளிப்படுத்த ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் அறிவித்துள்ள சுற்றுப்பயணமும் அப்படித்தான். மின்கட்டண உயர்வு குறித்து பாமக அன்புமணி ராமதாஸ் பேசியதற்கு அமைச்சர் சிவசங்கர் பதில் சொல்லிவிட்டார். அன்புமணி பொய்களாக பேசி தன் இருப்பை அரசியலில் வெளிப்படுத்திவருகிறார் என்றார். இச்செய்தியாளர் சந்திப்பின்போது திருவண்ணாமலை வடக்கு மா.செ தரணிவேந்தன் எம்.பியும் உடன் இருந்தார்.

இந்த ஓரணியில் தமிழ்நாடு எப்படி செயல்படப்போகிறது என திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள், ஐடி அணி நிர்வாகிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 68 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அதில் பி.எல்2 தலைமையில் கிளை செயலாளர், ஐடி அணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி, இளைஞரணி நிர்வாகி என 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும். அவர்களிடம் திமுக ஆட்சியின் திட்டங்கள் அடங்கிய புத்தகத்தை முதலில் வழங்க வேண்டும். அதிலுள்ள எந்த திட்டத்தில் நீங்கள் பயன்பெற்றுள்ளீர்கள் என்று கேட்கவேண்டும் அதனை பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள மொபைல் ஆப்பில் பதிவு செய்யவேண்டும். அப்படி பதிவு செய்யும் முன்பு சம்மந்தப்பட்ட வீட்டினரின் மொபைல் எண் வாங்கி உள்ளீடு செய்தால் அந்த நம்பருக்கு ஒரு ஓ.டி.பி வரும் அதை உள்ளீடு செய்தால் மட்டுமே ஆப் செயல்படும். அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள், கோரிக்கை என்னவென விசாரித்து அதனை பதிவு செய்தபின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைகிறீர்களா எனக்கேட்டு பதிவு செய்யவேண்டும், அதன்பின் அவர்கள் திமுக உறுப்பினராக இணைய விரும்புகிறார்களா எனக்கேட்டு ஆமாம் என்றபின் அவரை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களை மொபைல்   எண்ணை  உள்ளீடு செய்து இணைக்கவேண்டும்.

அதன்பின் அந்த வீட்டில் ஒரு ஓரணியில் தமிழ்நாடு என்கிற ஸ்டிக்கரை ஒட்டிவிட்டு வரவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் 15 நிமிடங்கள் செலவிடவேண்டும் எனச்சொல்லப்பட்டுள்ளது. இப்படி தங்களது வாக்குச்சாவடியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும். இதற்கான கால அளவு இரண்டு மாதம் என அறிவித்துள்ளது திமுக தலைமை. இந்த பணிகளை தொகுதி பொறுப்பாளர்கள் கண்காணிக்கவேண்டும். வாரம் இரண்டு முறை தங்களது தொகுதிக்கு சென்று இந்த பணிகளை கவனித்து அதற்கான அறிக்கையை தலைமைக்குத் தெரிவிக்கவுள்ளனர்.

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்

dmk b.j.p ev velu
இதையும் படியுங்கள்
Subscribe