குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் உள்ள கபோத்ரா பகுதியைச் சேர்ந்தவர் கங்கனா (பெண்ணின் நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவர் 35 வயதான கணேஷ் ராஜ்புத். பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய கணேஷ் ராஜ்புத், சிறையில் இருந்து அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார்.

இந்நிலையில், தான் சிறையில் இருந்தபோது, மனைவி கங்கனா வேறு ஒரு ஆணுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக கணேஷ் ராஜ்புத் சந்தேகித்துள்ளார். இதன் காரணமாக, ஜூலை 24 அன்று இரவு 9 மணியளவில் கங்கனாவை கட்டையாலும், சுத்தியலாலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதில் அவருக்கு ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. இருப்பினும், இதனைப் பொருட்படுத்தாமல், கணேஷ் கங்கனாவை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தார்.

மறுநாள், ஜூலை 25 ஆம் தேதி காலை கணேஷ் தனது நண்பரான பிரின்ஸ் குமார் (22) என்பவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். பின்னர், நடந்தவற்றை அவரிடம் கூறி, இருவரும் சேர்ந்து கங்கனாவை ஆட்டோரிக்ஷாவில் தீனதயாள் நகரில் உள்ள ஒரு வாடகை அறைக்கு கடத்திச் சென்றனர். அங்கு, கணேஷ் ராஜ்புத் மற்றும் பிரின்ஸ் குமார் ஆகிய இருவரும் கங்கனாவை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கங்கனாவை கொலை செய்ய திட்டமிட்ட கணேஷ், கட்டையாலும், இரும்புக் கம்பியாலும் அவரை மீண்டும் மீண்டும் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்து, இரத்த வெள்ளத்தில் கங்கனா உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார். இதையடுத்து, கங்கனாவை அப்புறப்படுத்த முடிவு செய்த கணேஷ், தனது மற்ற நண்பர்களான விஜய் (29) மற்றும் அப்பா ஜகந்நாத் வாக்மரே (39) ஆகியோரையும் உதவிக்கு அழைத்துள்ளார்.

Advertisment

பின்னர் , நான்கு பேரும் சேர்ந்து, மயக்க நிலையில் இருந்த கங்கனாவை ஆட்டோரிக்ஷாவில் ஏற்றி, தபி ஆற்றுக்கு அருகே உள்ள ஒரு நீர்த்தேக்கத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியிருக்கின்றனர். அதன்பிறகு, கங்கனாவின் கைகளையும் கால்களையும் கயிற்றால் கட்டி, நீரில் மூழ்கடித்து கொலைசெய்ய முயன்றுள்ளனர். ஆனால்,  எப்படியோ அவர்களிடம் இருந்து தப்பித்த கங்கனா, அருகிலுள்ள கபோத்ரா காவல் நிலையத்திற்கு சென்று, கண்ணீர் மல்க தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்துள்ளார்.

104

இதையடுத்து பெண்ணின் புகாரின் பேரில், கூட்டுப்பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்த போலீசார், கணவர் கணேஷ் ராஜ்புத், அவரது நண்பர்கள் பிரின்ஸ் குமார், விஜர் மற்றும் அப்பா ஜெகநாத் வாக்மரே ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.   

Advertisment

இதுகுறித்து பேசிய சூரத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், “பெண்ணின் புகாரின் அடிப்படையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்து, தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்திருக்கிறார்.

மேலும், முக்கிய குற்றவாளியான ஓட்டுநர் கணேஷ் ராஜ்புத் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும், அவர் மீது சூரத் காவல் நிலையங்களில் 26 குற்ற வழக்குகள் நிலைவையில் இருப்பதாகவும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சம்யம் மற்ற குற்றவாளிகளிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.