ஜிண்டல் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத் தலைவரும் குருக்ஷேத்ரா பாஜக எம்.பி.யுமானவர் நவீன் ஜிண்டல். இவரது மகள், 26 வயதான யஷஸ்வினி ஜிண்டலின் திருமணம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி டெல்லியில் பிரம்மாண்டமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

திருமண விழாவின் சங்கீத் நிகழ்ச்சியில் அரசியல் வேறுபாடுகளை மறந்து மூன்று பெண் எம்.பி.க்கள் நடனமாடி அசத்திய காட்சி தற்போது படுவைரலாக மாறியுள்ளது. பாஜக எம்.பி. கங்கனா ரணாவத், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, என்சிபி (ஷரத் பவார் பிரிவு) எம்.பி. சுப்ரியா சுலே ஆகிய மூவரும் ஷாருக்கான் நடித்த ‘ஓம் ஷாந்தி ஓம்’ படத்தின் சூப்பர் ஹிட் பாடலான “தீவாங்கி தீவாங்கி” பாடலுக்கு சேர்ந்து அசத்தலாக நடனமாடினர். நவீன் ஜிண்டலும் இவர்களுடன் இணைந்து ஸ்டெப்கள் போட்டு கூட்டத்தை உற்சாகப்படுத்தினார். இதற்கு முன்பே கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எம்பி சகோதரிகளுடன் சில சினிமா தருணங்கள்” என்ற கேப்ஷனுடன் ரிஹர்சல் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார்.

Advertisment

அடுத்து நவீன் ஜிண்டல், அவரது சகோதரர்கள் ரதன் ஜிண்டல், சஜ்ஜன் ஜிண்டல், பிரித்விராஜ் ஜிண்டல் ஆகியோரும் சேர்ந்து 90களின் பிரபல பாடலான “நா நா நா ரே” பாடலுக்கு ஆடிய வீடியோவும் வைரலானது. சஜ்ஜன் ஜிண்டலின் மனைவி சங்கீதா ஜிண்டல் இதை எக்ஸில் பகிர்ந்து “என் சகோதரர்கள் அனைவரும் ஒன்றாக ஆடுவது அரிதிலும் அரிது!” என்று உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டார்.

இந்த வீடியோக்கள் எக்ஸ், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஷார்ட்ஸ் என அனைத்து தளங்களிலும் லட்சக்கணக்கில் பார்க்கப்பட்டு வருகின்றன. அரசியல் எதிரிகள் டான்ஸ் ஃப்ளோரில் நண்பர்களாக மாறி ஒன்றாக நடனமாடுவது பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், மறுபுறம் “பகலில் சண்டையிடுவது, இரவில் ஒன்றாகச் சேர்ந்து நடனமாடுவதா?” என்று கிண்டலடித்தும் வருகின்றனர்.

Advertisment