கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற விஜய்யின் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கூறியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. அப்போது தவெக சார்பில் வாதிடுகையில், ‘கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. உச்ச நீதிமன்றமே சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடக்கட்டும். அதனை முன்னாள் நீதிபதி மேற்பார்வையிடட்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை. கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எதிர் மனுதாரராக இல்லாத விஜய்யை உயர்நீதிமன்ற விசாரணை நீதிபதி விமர்சித்துள்ளார். விஜய் குறித்து பல்வேறு கருத்துகளை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில், ‘கரூர் துயரச் சம்பவத்தின் கள நிலவரங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் தமிழ்நாட்டு அதிகாரிகள் தான். எனவே ஒரு சிறந்த அதிகாரியின் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை தொடர வேண்டும். அதே சமயம் இந்த விவகாரத்தை பொறுத்தவரைக்கும், தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணைக் குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாகச் சென்னை உயர் நீதிமன்றம்தான் நியமித்தது. ஐ.ஜி. அஸ்ரா கர்க் என்ற காவல்துறை மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணைக் குழுவினுடைய தலைமை விசாரணை அதிகாரியாகச் செயல்பட்டு வருகிறார். இதன் மூலம் உயர்நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது. விதிவிலக்காகத் தவிர்க்க முடியாத (Exceptional) வழக்குகளில் தான் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவுகள் உள்ளன. எனவே சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடத்தியதை தொடர்ந்து, ‘இந்த வழக்கு மதுரை கிளையில் உள்ள நிலையில் ஏன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தமிழக அரசிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தனர். இந்த நிலையில், இன்று (13-10-25) உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.