சோபியா குரேஷி விவகாரம்; ‘எங்கள் பொறுமையைச் சோதிக்கிறார்’ - பா.ஜ.க அமைச்சரைக் கண்டித்த உச்ச நீதிமன்றம்

qureshibjp

Supreme Court slams BJP minister at colonel Sofiya Qureshi case

பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்தது. அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த ஒப்புக்கொண்டது. இதனால், இரு நாடுகளிடையே தற்போது அமைதி நிலவி வருகிறது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை லெப்டினண்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள், பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பெண் அதிகாரிகளை கொண்டே விவரங்களை வெளியிட வைத்திருந்தது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனை பலரும் பாராட்டி இருந்தனர்.

ஆனால் அதே நேரத்தில், கர்னல் சோபியா குரேஷியை இழிவுப்படுத்தும் விதமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருந்தது நாடு முழுவதும் சர்ச்சையாக மாறியது. அரசு விழாவில் கலந்து கொண்ட குன்வார் விஜய் ஷா, “கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் எங்கள் மகள்களை கைம்பெண் ஆக்கியவர்களுக்கு, ஒரு பாடம் கற்பிக்க நாங்கள் அவர்களின் சொந்த சகோதரியை அனுப்பினோம். சுற்றுலாப் பயணிகளை மதத்தைக் கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். எனவே பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பினார். அதனால், நீங்கள் எங்கள் சகோதரிகளை கைம்பெண்கள் ஆக்கினால், உங்கள் சகோதரி வந்து உங்கள் ஆடைகளைக் களைவாள்” என்று சர்ச்சையாகப் பேசினார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

கடும் எதிர்ப்பை அடுத்து, தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா தெரிவித்தார். தான் தவறான முறையில் பேசவில்லை என்றும், கர்னல் சோபியா குரேஷி தனது சகோதரிக்கு மேலானவர் என்றும், தான் பேசிய பேச்சால் யாராவது காயப்பட்டிருந்தால் இதயத்தில் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், அமைச்சர் குன்வார் விஜய் ஷார் மீது 4 மணி நேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என போலீஸுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில், விஜய் ஷா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குன்வார் விஜய் ஷா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குன்வார் விஜய் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தது. குன்வார் விஜய் ஷா பொது மன்னிப்பு கேட்ட போதிலும், உச்ச நீதிமன்றம் அவரின் விளக்கத்தை நிராகரித்தது. மன்னிப்புக் கேட்பது போல் முதலைக் கண்ணீர் வடிக்கிறார் என்று உச்சநீதிமன்றம் அவரை கண்டித்தது. அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மாலா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (28-07-25) விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘இந்த மனிதர் எங்கள் பொறுமையைச் சோதிக்கிறார். உங்கள் பொது மன்னிப்பு எங்கே? சமூக ஊடக வீடியோவில் மன்னிப்பு கேட்பது என்பது தகுதியற்றது. குன்வார் விஜய் ஷாவின் நடத்தைக்குப் பின்னால் உள்ள உள்ள விஷயங்கள் குறித்து சந்தேகம் எழுகிறது. அமைச்சர் பகிரங்கமாகவும் அர்த்தமுள்ள வகையிலும் உண்மையான வருத்தத்தை வெளிப்படுத்த வேண்டும். மன்னிப்பு பற்றிய முழு விவரங்களையும், அது எங்கே, எப்படி வெளியிடப்பட்டது என்பதை சமர்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டு இந்த வழக்கை ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Supreme Court colonel sofia qureshi kunwar vijay shah Sofiya Qureshi
இதையும் படியுங்கள்
Subscribe