Supreme Court sent notice to Election Commission for answered files case against SIR
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு 2026இல் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலையொட்டி, அந்தந்த மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை வரும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிக்கு, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகள், கேரளாவில் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இருப்பினும், கடந்த 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்ட்கள் துணையோடு தேர்தல் ஆணைய அதிகாரிகள், வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். எஸ்.ஐ.ஆர் (SIR) படிவங்களை வீடு வீடாக கொடுத்து இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்கள், படிவங்களை நிரப்பாதவர்கள், ஆவணங்களை வழங்காதவர்கள் ஆகியவற்றவர்களை கண்டறிந்து திருத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை எதிர்த்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், திடீரென நேற்று திமுக போட்ட வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என அதிமுக உச்ச நீதிமன்றத்தில் இடையீடு மனுவை தாக்கல் செய்தது.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்று (11-11-25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தாக்கல் செய்துள்ள மனுக்களின் அடிப்படையில் 2 வாரத்தில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இதனிடையே, அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், எங்களுடைய மனுவை ஏற்றுக்கொண்டு எங்களையும் வழக்கில் இணைத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார். அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘இதே மனுவின் அடிப்படையில் நீங்கள் வாதிட அனுமதிக்க முடியாது. இதை இடையீட்டு மனுவாக ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. எனவே, நீங்கள் உங்களுடைய மனுவை ரிட் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்து அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் அவர்கள், ‘தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளைத் தொடரலாம்’ என்று கூறி இந்த வழக்கை நவம்பர் 26ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us