சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்குத் தமிழக அமைச்சரவையிலும் இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராகக் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பதவி வகித்து வந்தார். அதே சமயம் ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி உரியப் பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதற்குச் செந்தில் பாலாஜி தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், ‘அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதைச் செந்தில் பாலாஜி தரப்பு தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
அதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி, தனது அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனிடையே தன் மீது பதியப்பட்ட வழக்கின் தீர்ப்பில் உள்ள சில கருத்துக்களை நீக்கி உத்தரவிட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று (06-10-25) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெயமால்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘வழக்கு விசாரணையில் இருக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிக்கக் கூடாது என்று கூறமுடியாது’ என வாதிட்டார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “இது நீதிமன்றத்தின் மனதைப் பிரதிபலிக்கிறது. நீங்கள் அமைச்சராக மாறுவதை நீதிமன்றம் தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் அமைச்சராகும் வேளையில், சாட்சிகளை கலைத்ததாக உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்தால், நாங்கள் மீண்டும் ஜாமீனை ரத்து செய்வோம்” என்று தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து வழக்கறிஞர் கபில் சிபல், ‘தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சிகளை கலைக்க முயற்சித்ததாக எந்த குற்றச்சாட்டும். விசாரணை இன்னும் தொடங்கவில்லை. அப்படி அவர் சாட்சியங்களை கலைக்க முயன்றதாகக் கண்டறியப்பட்டால் அவரது ஜாமீனை ரத்து செய்யலாம்’ என்று கூறினர். இதையடுத்து நீதிபதிகள், “செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்கக் கூடாது என நாங்கள் சொல்லவில்லை. நீங்கள் அமைச்சராக விரும்பினால், அனுமதி கோரி விண்ணப்பம் தாக்கல் செய்யலாம். நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்” எனத் தெரிவித்தனர். மேலும் அவர்கள், “ஆனால், சாட்சிகளை கலைக்க எந்தவொரு முயற்சியும் ஜாமீனை திரும்பப் பெற வழிவகுக்கும்” என்று கூறி அனைத்து தரப்பும் 2 வாரங்களில் பதில்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.