ஒரு மனிதனை மற்றொரு மனிதன் இழுக்கும் செல்லும் கை ரிக்‌ஷா முறை மனிதாபிமானமற்ற செயல் என்றும், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ராய்கட் மாவட்டத்தில் மாத்தேரான் எனும் கிராமம் அமைந்துள்ளது. மலை நகரமான இக்கிராமத்தில் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மும்பையில் இருந்து சுமார் 90 கி.மீ தொலைவில் இந்த பகுதி அமைந்திருப்பதால் ஆண்டுதோறும்ம் மலைவாசல் தலத்திற்கு சுமார் 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள். இயற்கை சூழலை கெடுக்க விரும்பாததால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் வாகனப் போக்குவரத்துக்கு தடை செய்துள்ளனர். அதாவதும் ஆண்டுதோறும் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துத் தேவைகளையும், கிராமத்தில் வசிக்கும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காக கையால் இழுக்கப்படும் கை ரிக்‌ஷா முறைகள் இன்னும் நடைமுறையில் உள்ளன.

இந்த சூழலில், மாத்தேரான் பகுதியில் கடைபிடிக்கப்படும் கை ரிக்‌ஷா முறைக்கு தடை விதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதிகள் வினோத் சந்திரன் என்.வி அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வேதனையுடன் கூறியதாவது, ‘வளர்ந்து வரும் நாடான இந்தியா போன்ற ஒரு நாட்டில் மனித கண்ணியம் என்ற அடிப்படைக் கருத்தைத் தாக்கும் இத்தகைய மனிதாபிமானமற்ற நடைமுறையை அனுமதிப்பது சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான அரசியலமைப்பு வாக்குறுதியை குறைத்து மதிப்பிடுவதற்கு சமம். ஒரு மனிதன் மற்றொரு மனிதனை இழுக்கும் மனிதாபிமானமற்ற நடைமுறை இன்னும் மாத்தேரான் நகரில் பரவலாக இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

இந்த நடைமுறையால் சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார நீதிக்கான அரசியலமைப்பு வாக்குறுதி இன்னும் உயிருடன் உள்ளதா? என்று நம்மை நாமே கேள்வி கேட்டு கொள்ளவேண்டும். நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளுக்குப் பிறகும், அரசியலமைப்பு இயற்றப்பட்டு 75 ஆண்டுகளுக்குப் பிறகும், குடிமக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதியை உறுதியளித்த பிறகும் கூட இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடைமுறையைத் தொடர்வது, இந்திய மக்கள் தங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு துரோகம் செய்வதாகும். எனவே, கையால் இழுக்கும் ரிக்‌ஷாக்களை அனுமதிக்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இன்று முதல் 6 மாதங்களுக்குள் கையால் இழுக்கும் ரிக்‌ஷா நடைமுறையை படிப்படியாக மாநில அரசு நிறுத்த வேண்டும். அப்படியானால், வாழ்வாதாரத்திற்காக அதைச் சார்ந்திருப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழும். சுற்றுச்சூழலுக்கு உகுந்த மின்- ரிக்‌ஷாக்களுக்கு மாறுவதில் தான் அதனுடைய பதில் இருக்கிறது. குடிமக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிகாட்டுதல் கொள்கைகளின் கீழ் மாநிலத்திற்கும் ஒரு கடமை உள்ளது. மாத்தேரானில் உள்ள ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை செயல்படுத்துமாறு மகாராஷ்டிரா அரசை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது” என்று உத்தரவிட்டனர். 

Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், 1973ஆம் ஆண்டின் போது முதல்வராகப் பதவி வகித்த காலத்தில் மனிதனை மனிதன் சுமந்து செல்லும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி தமிழ்நாட்டில் கை ரிக்‌ஷா முறையை ஒழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.