Supreme Court says Compensation to victims is not equivalent punishment meted to culprit
கடந்த 2017 ஆம் ஆண்டு, தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்குக் கத்திக்குத்து வழக்கில் விசாரணை நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை ரத்து செய்து, குற்றவாளிகளின் தண்டனை காலத்தைக் குறைத்தது. அதாவது, குற்றவாளிகள் சிறைகளிலிருந்த காலத்தையே தண்டனை காலமாக கருதி அவர்களை விடுதலை செய்தது. அதே நேரத்தில், விதிக்கப்பட்ட அபராத தொகையை ரூபாய் 5,000 லிருந்து ரூபாய் 50,000 ஆக உயர்த்தியது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் ராஜேஷ் பிந்தால் மற்றும் விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (18-02-26) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், விசாரணை நீதிமன்றம் வழங்கிய மூன்றாண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது. அதோடு, குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனையைக் குறைத்து, அபராதத்தை மட்டும் உயர்த்தியதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த உத்தரவில், ‘கொடுங்குற்ற வழக்குகளில் தண்டனையைக் குறைத்து, இழப்பீட்டை அதிகரிக்கும் போக்கு ஆபத்தானது. பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு, குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனைக்கு ஈடாகாது. இது பணம் செலுத்தினால் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விடுபடலாம் என்ற தவறான கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும். விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை, உரியக் காரணம் கூறாமல் உயர்நீதிமன்றம் குறைப்பது கவலைக்குரியது. எந்த ஒரு நபருக்கும் குற்றத்திற்கு இணையான தண்டனை வழங்கப்படுவதை நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். மக்களுக்குச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை நிலை பெறச் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இந்த வழக்கில், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் நான்கு வாரங்களுக்குள் சரணடைந்து எஞ்சிய தண்டனை காலத்தைச் சிறையில் கழிக்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Follow Us