பா.ஜ.க.வுக்கு ஆதரவாக  தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். அதாவது, 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியான மகாதேவபுரா தொகுதியில் 11,965 போலி வாக்காளர்கள், 40,009 போலி மற்றும் செல்லாத முகவரிகளைக் கொண்ட வாக்காளர்கள், 10,452 ஒற்றை முகவரி வாக்காளர்கள், 4,132 செல்லாத புகைப்படங்களைக் கொண்ட வாக்காளர்கள என 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு குற்றம் சாட்டினார்.

Advertisment

தேர்தல் ஆணையம் இவ்வளவு பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக தரவுகளுடன் ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டு நாடு முழுவதும் அதிர்வலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இந்தியா கூட்டணித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் பா.ஜ.கவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, வாக்காளர் பட்டியல் குளறுபடியைக் கண்டித்தும், பீகார் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்தும் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ என்ற பெயரில் பீகாரில் ராகுல் காந்தி பேரணி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி 16 நாட்கள் வரை நடத்தினார்.

Advertisment

இதற்கிடையே, தேர்தல் ஆணையம் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி மீண்டும் சில தரவுகளை கடந்த செப்டம்பர் மாதம் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து வழங்கினார். அதில், கர்நாடகா மாநிலத்தின் ஆலந்து என்ற தொகுதியில் 6,018 எண்ணிக்கை வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் துணையாக நின்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகாவில் உள்ள தொகுதிகளில் ராகுல் காந்தி சுட்டிக்காட்டிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு குறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ரோஹித் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மாலா பாக்ஸி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (13-10-25) வந்தது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பொது நலனுக்காக தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த மனுவை நாங்கள் ஏற்க விரும்பவில்லை. இது போன்ற அரசியல் விவகாரங்களுக்காக நீதிமன்றங்களை மேடை ஆக்காதீர்கள். மனுதாரர் தேர்தல் ஆணையம் முன் வழக்குத் தொடரலாம். உங்கள் புகாரைத் தீர்மானிக்க தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.