நாடு முழுவதும் தெரு நாய்களின் எண்ணிக்கை கால்நடைகளுக்கு இணையாக வளர்ந்துள்ளது. இதனால், சாலை விபத்துகள் அதிகரித்துள்ளது. மற்றொரு பக்கம், நாய்களுக்கு வெறி நோய் ஏற்பட்டு மனிதர்களையும், கால்நடைகளையும் கடித்துக் குதறும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோழி இறைச்சிக் கழிவுகளை சாப்பிடும் நாய்களுக்குத் தோல் நோய்கள் ஏற்பட்டு பரிதாபமாகச் சுற்றி வருகிறது. அதனால் நாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகள், தெரு நாய்களுக்குக் கருத்தடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த சூழலில், தெருநாய்களுக்கு உணவளிப்பதை தடுக்கிறார்கள் என்று அதனால் தன்னால் தெருநாய்களுக்கு உணவளிக்க முடிவதில்லை என்றும் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நபர், கடந்த ஆண்டு அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அலகாபாத் நீதிமன்றம், தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால் அந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு விதிகளின்படி தெருநாய்களுக்கு தன்னால் உணவளிக்க முடியவில்லை. உணவளிப்பதற்கு சிலர் தடுப்பதால் மனுதாரர் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்’ என்று வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘இந்த விலங்குகளுக்கு எல்லா இடங்களும் இருக்கிறது, ஆனால் மனிதர்களுக்கு தான் இடமில்லை. நீங்கள் ஏன் உங்கள் சொந்த வீட்டிலேயே நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது?. யாரும் உங்களைத் தடுக்க போவதில்லை. உங்கள் சொந்த வீட்டில் ஒரு இடம் திறக்க நாங்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குகிறோம். சமூகத்தில் உள்ள ஒவ்வொரு நாய்களுக்கும் உங்கள் சொந்த வீட்டிலேயே உணவளிக்கலாம்.
நீங்கள் காலையில் சைக்கிளில் சென்றிருக்கிறீர்களா? முயற்சி செய்து பாருங்கள், என்ன நடக்கிறது என்று தெரியும். காலையில் நடைபயிற்சி செய்பவர்கள் ஆபத்தில் உள்ளனர். சைக்கிள் ஓட்டுபவர்களும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர். தெரு நாய்களைப் பாதுகாப்பதற்கு பொருந்தக்கூடிய சட்டத்தின் விதிகளின்படி உத்தரவாதம் அளிக்கப்படும். அதே வேளையில், இந்த தெரு நாய்களின் தாக்குதல்களால் தெருக்களில் சாதாரண மக்களின் நடமாட்டம் தடைப்படாமல் இருப்பதற்கும், அவர்களின் கவலைகளையும் அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும்’ என்று கூறினர்.