காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசிதரூர் அண்மைக் காலமாகவே மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் பாராட்டி வருகிறார். அத்துடன் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக வெளிநாடுகளுக்கு சென்று விளக்கமளிக்க சசிதரூருக்கு மத்திய அரசு கொடுத்த முக்கியத்துவம் பேசுபொருளானது. அதில் இருந்து சசிதரூரின் நடவடிக்கை முற்றிலும் மாறியிருப்பதாகவும், தலைமையின் உத்தரவை மீறி பிரதமர் மோடியை புகழ்வதாகவும் அக்கட்சியினர் குற்றம் சாட்டினர். அத்தோடு கேரள காங்கிரஸ் நிர்வாகிகளே சசிதரூரை கடுமையாக சாடி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக கூறி சசி தரூர் மீது தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கடந்த 2018 நவம்பரில் பிரதமர் மோடியை, ‘சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள்’ என்று சசி தரூர் கூறியதாகக் கூறப்படுகிறது. அதற்கு சசி தரூர் மத உணர்வுகளை புண்படுத்தியதாகவும், பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும் கூறி பா.ஜ.க தலைவர் ராஜீவ் பப்பர் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, கடந்த அக்டோபர் 2023இல் டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்து விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சசி தரூர் மேல்முறையீடு செய்தார். அப்போது நீதுபதி ராய் கூறியதாவது, ‘ஒரு உருவகம் பெரும்பாலும் குறைந்த வார்த்தைகளில் உண்மையை வெளிப்படுத்துகிறது. ஆயுரம் வார்த்தைகளை விட ஒரு புகைப்படம் பேசுவது போல், ஒரு உருவகம் பேசும். இதற்கு ஏன் ஒருவர் கோபப்பட்டார் என்பது எனக்கு புரியவில்லை’ என்று கூறி இந்த வழக்கை இடைநிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், தன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி சசி தரூர் தாக்கல் செய்த மனுவை இன்று (23-07-25) தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிமன்றம், ‘இந்த விஷயத்தில் என்ன இருக்கிறது? இதைவிட முக்கியமான விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன. நீங்கள் பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஏன் இது மாதிரி விஷயங்களை கொண்டு வந்த நீதிமன்றத்தை தொந்தரவு செய்றீங்க?’ என்று புகார்தாரரை கண்டித்தார்.
அதனை தொடர்ந்து, ஆம் ஆத்மி தலைவர்கள் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அதிஷி மீது ராஜீவ் பப்பர் தொடர்ந்த மற்றொரு அவதூறு வழக்கையும், சசி தரூர் மீது தொடரப்பட்ட வழக்கையும் தனித்தனியாக பட்டியலிடுமாறு ராஜீவ் பப்பரின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். அப்போது, ‘எப்போதும் விசாரணை நடத்த வேண்டும், எப்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று எங்களுக்குச் சொல்ல வேண்டாம்’ என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து, இரண்டு வழக்கையும் அடுத்த வாரம் விசாரிப்பதாக கூறியது.