Supreme Court orders must include voters who were wrongly excluded in Bihar
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பெற்றோரின் பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இந்தியா கூட்டணி அடங்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்,
இதற்கிடையில் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை அளித்திருந்தன. அந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (22-08-25) வந்தது. அப்போது வாக்காளர் பட்டியலில் இருந்து தவறுதலாக நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது, “பீகார் தீவிர வாக்காளர் திருத்தத்தில் பெயர் நீக்கபப்ட்டவர்கள் ஆதாரை ஆவணமாக அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களிடம் 11 ஆவணங்களில் இல்லையெனில் ஆதார் விவரங்களைப் பெற்று மீண்டும் சேர்க்க வேண்டும். ஒருவர் தாமாக அல்லது பூத் ஏஜெண்ட மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க உரிமை உண்டு. வாக்காளர் விண்ணப்பத்தை நேரில் வழங்க வேண்டும் என்று ஆணையம் கட்டாயப்படுத்தக்கூடாது. படிவம் சமர்பிக்கப்படும் இடங்களில் உரிய ரசீது தர வேண்டும். வாக்காளர் திருத்தத்துக்கு தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணங்களில் ஒன்றை தரலாம். வாக்காளர்களுக்கு உதவ பூத் முகவர்களுக்கு அரசியல் கட்சிகள் உத்தரவிட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள், வரைவு பட்டியலில் சேர்க்கப்படாத சுமார் 65 லட்சம் நபர்களில் இறந்தவர்கள் அல்லது இடம் பெயர்ந்தவர்களைத் தவிர பிற விடுபட்ட நபர்கள் தொடர்பான ஆட்செபனைகளை செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.