பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரண்டு கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் நவம்பர் 14ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதே வேளையில், அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

பீகாரில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளதாக ஜூன் 24ஆம் தேதி தெரிவித்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், மொத்த வாக்காளர் எண்ணிக்கை 7.25 கோடி எனத் தெரிவித்து 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இது சர்ச்சையான நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் பின்னர் 2வது முறையாக மீண்டும் திருத்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

Advertisment

அந்த வாக்காளர் பட்டியலை கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.24 கோடி என்று குறிப்பிடப்பட்டு நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில்  21 லட்சம் பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பீகாரில் மொத்தமாக 47 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இரண்டு முறை மேற்கொண்ட திருத்த நடவடிக்கையின் போது மாறுபட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வந்ததால் குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு கடந்த நேற்று முன்தினம் (07-10-25) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2வது முறையாக நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் பெயர் விவரங்களை அக்டோபர் 9ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (09-10-25) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘திருத்தச் நடவடிக்கை போதுமான பாதுகாப்புகள் இல்லாமல் வாக்காளர் பட்டியலில் இருந்து தன்னிச்சையாக நீக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இதனால் லட்சக்கணக்கான குடிமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது மற்றும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது’ என்று மனுதாரர்கள் வாதிட்டனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் சார்பில், ‘கடைசியாக, வரைவுப் பட்டியலுக்குப் பிறகு ஒரு நபரின் பெயர் நீக்கப்பட்டதாகக் கூறி நீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரம் வழங்கப்பட்டது. நாங்கள் இது குறித்து விசாரித்தோம். அது தவறானது. அவர் ஒருபோதும் கணக்கெடுப்பு படிவத்தை தாக்கல் செய்யவில்லை, மேலும் சாவடி எண்ணே தவறானது. இதுபோன்ற தவறான அறிக்கைகள் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியது.

Advertisment

சட்ட உதவி தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவுவார்கள் என்று இந்த நீதிமன்றம் ஏற்கனவே செப்டம்பர் 8 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது. அப்போது அவர் அணுகி விண்ணப்பித்திருக்கலாம், ஆனால் அவர் விண்ணப்பிக்கவில்லை. நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளின்படி, தேர்தல் ஆணையம் ஏற்கனவே பூத் வாரியாக 65 லட்சம் நீக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது. பூத் நிலை அதிகாரிகள், பூத் நிலை முகவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அறிந்திருந்தன. அவரது பெயர் அங்கு இல்லை என்பது அவருக்கு முழுமையாகத் தெரியும், மக்கள் அங்கே இருந்தனர், பூத் நிலை அதிகாரிகள் அங்கே இருந்தனர், ஆனால் அவர் செல்லவில்லை’ என்று வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், “இந்தப் பெயரில் ஒருவர் இருக்கிறாரா என்பது இப்போது மிகவும் சந்தேகமாக உள்ளது. முதலாவதாக சரியான தகவல்களை வழங்க வேண்டும், அதுவும் எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நிறுவனங்கள் தாங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் முடிவுகள் எப்படியிருந்தாலும், இறுதிப் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டதாகக் கூறப்படும் கிட்டத்தட்ட 3.7 லட்சம் நபர்களுக்கு மேல்முறையீடு செய்யும் உரிமையை உறுதி செய்வது ஒரு சவாலாக உள்ளது. தாக்கல் செய்வதற்கான நேரம் முடிந்துவிட்டதால், இந்த விலக்கப்பட்ட நபர்கள் மேல்முறையீடு செய்ய உதவுவதற்காக துணை சட்ட தன்னார்வலர்களின் சேவையை வழங்குமாறு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் அனைத்து செயலாளர்களுக்கும் தகவல் அனுப்புமாறு பீகார் சட்ட சேவைகள் ஆணையத்தின் தலைவருக்கு உத்தரவிடுவது ஒரு இடைக்கால நடவடிக்கையாக பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று கூறி உத்தரவிட்டனர்.