தெருநாய்கள் துரத்துவதால் வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும், ரேபிஸ் நோயால் அதிகரிக்கும் உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்தும் வரும் நிலையில், இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நேற்று (11-08-25) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்து நிரந்தரமாக தங்குமிடங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் எந்தவித சமரசமும் காட்டாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் விலங்கு நல ஆர்வலர்களிடம் கோபத்தை தூண்டியுள்ளது. இந்த உத்தரவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த உத்தரவை எதிர்த்து போராட டெல்லியில் உள்ள இந்தியா கேட் வந்த பல விலங்கு உரிமை ஆர்வலர்களை அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாகக் கூறி அவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், ‘டெல்லியில் தெருநாய்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு, மனிதாபிமான, அறிவியல் சார்ந்த கொள்கைகளுக்கு ஒரு பின்னடைவாகும். இந்த குரலற்ற உயிர்கள் அழிக்கப்பட வேண்டிய சிக்கல்கள் அல்ல, அவைகளை அகற்றும் முடிவு கொடூரமானது. காப்பகங்கள், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை மூலம் பொது பாதுகாப்பையும் விலங்குகள் நலனையும் ஒருசேர உறுதி செய்ய முடியும்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தனது வளாகத்தில் தெருநாய்கள் அதிகரித்து வருவது குறித்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘உச்ச நீதிமன்ற வளாகத்திலும் அதைச் சுற்றியுள்ள தாழ்வாரங்களிலும், லிஃப்டினுள்ளும் தெருநாய்கள் சுற்றித் திரியும் சம்பவம் கணிசமாக அதிகரித்துள்ளது கவனிக்கப்பட்டுள்ளது. அதனால், மீதமுள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் சரியாக மூடப்பட்ட குப்பைத் தொட்டிகளில் மட்டுமே அப்புறப்படுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் திறந்தவெளிகளிலோ அல்லது மூடப்படாத தொட்டிகளிலோ உணவை அப்புறப்படுத்தக்கூடாது. விலங்குகள் உணவுக்காக ஈர்க்கப்படுவதையும், அவற்றைத் தேடிச் செல்வதையும் தடுக்க இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது. இதன் மூலம் கடிக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைத்து சுகாதாரத் தரங்களைப் பராமரிக்க முடியும். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை செயல்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பு அனைவரின் பாதுகாப்பிற்கும் அவசியம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.