Supreme Court orders file a reply Election Commission to remove 65 lakh voters in bihar
பீகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதாவது இந்த திருத்தத்தின்படி, 2003ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத அனைவரும் தங்கள் பிறந்த தேதி, பிறந்த இடம் ஆகியவற்றுக்கான சான்றுகளை அளிக்க வேண்டும் எனவும், இவர்களில் 1981 ஜூலை 1க்குப் பிறகு பிறந்தவர்கள் தங்களுடைய பிறப்பிடம் சார்ந்த சான்றுகளை வழங்க வேண்டும் என்றும் இந்த சான்றிதழ்கள் இல்லாதோர் வாக்களிக்க தகுதியில்லாதவர்களாக அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால், 20% புலம்பெயர்ந்த வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், இதனால் பலரும் பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு, கடந்த ஜூலை 10ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஷு துலியா மற்றும் ஜோமால்யா பாக்சி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் ஆதார், தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவை சேர்க்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, பட்டியலில் தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறி அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் முதல் கட்டமாக மொத்தம் 65.2 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்ட வாக்காளர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த 5 நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்திலும், பீகார் சட்டப்பேரவைக்கு வெளியிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கோரி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு தீவிர திருத்தத்தின் போது முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசு சாரா அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பெயர்களின் அடையாளம் இன்னும் தெரியவில்லை. இடம்பெயர்வு காரணமாக நீக்கப்பட்ட 32 லட்சம் பெயர்களில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்கள் குறித்த எந்த விவரங்களையும் மத்திய தேர்தல் ஆணையம் இன்னும் வழங்கவில்லை. பூத் நிலை அதிகாரிகள் சுயாதீனமாக பெயர்களை நீக்க முடிவு செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது’ எனக் குறிப்பிட்டார்.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் பூயான் மற்றும் என் கே சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘தேர்தல் ஆணையத்தின் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்படி, அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கு தொகுதி அளவில் வாக்காளர் பட்டியல் வழங்கப்பட வேண்டும்’ என்று கூறினார். இதற்கு பதிலளித்த பிரசாந்த் பூஷண், ‘தொகுதி அளவில் உள்ள பட்டியல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் பகிரப்படவில்லை. அவர்கள் ஏதேனும் அரசியல் கட்சிக்கு அளித்திருந்தால், காரணங்கள் வழங்கப்படவில்லை’ என வாதிட்டார். பிரசாந்த் பூஷணின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், ‘விரிவான மதிப்பாய்வை உறுதி செய்வதற்காக வரைவு பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பு அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பகிரப்பட்டுள்ளது’ என்று கூறியது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘இதையெல்லாம் ஏன் ஒரு பதிலில் சொல்ல முடியாது? நீங்கள் வழங்கியிருந்தால், தயவுசெய்து நீங்கள் வழங்கிய அரசியல் கட்சிகளின் பட்டியலைக் கொடுங்கள். இதனால் பூஷனின் கட்சிக்காரர் அந்த அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடமிருந்து தகவல்களை சேகரிக்க முடியும். சனிக்கிழமைக்குள் உங்கள் பதிலைத் தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறி உத்தரவிட்டனர். பீகார் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆகஸ்ட் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.