Supreme Court orders Chief Secretaries to appear at Stray dog issue
நாடு முழுவதும் தொடர்ச்சியாக நாய் கடி சம்பவங்களால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தெருநாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான பிரச்சினை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு விசாரணை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைநகர் டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்து நிரந்தரமாக காப்பகங்களுக்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் எந்தவித சமரசமும் காட்டாமல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றும், இந்த நடவடிக்கையை தடுப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, சர்ச்சையை கிளப்பியது மட்டுமல்லாமல் விலங்கு நல ஆர்வலர்களிடம் கோபத்தை தூண்டியது. இந்த உத்தரவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, முந்தைய உத்தரவை சிறிய மாற்றம் மட்டும் செய்திருந்தார்கள். அதாவது, பிடிக்கப்படும் தெருநாய்களுக்கு உரிய தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்த பிறகு அந்த நாய்கள் எங்கு பிடிக்கப்படுகிறதோ அந்த பகுதியிலேயே விட்டுவிட வேண்டும் என்றும், ரேபிஸ் நோய் பரப்பக்கூடியதாக கருதப்படும் நாய்களை பாதுகாப்பான காப்பகங்களில் உரிய முறையில்அடைத்து வைக்க வேண்டும் என்றும் தெருவோர நாய்களுக்கு உணவளிக்கக் கூடியவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட சில இடங்களில் மட்டுமே உணவுகளை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
அதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இந்த வழிமுறைகளை வகுத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதாவது தெருநாய்கள் விவகாரத்தில் மாநிலத்தில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது, அதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது போன்ற விஷயங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று (27-10-25) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்வி அஞ்சாரியா ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு, ‘தெருநாய்களை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று டெல்லி, தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே தற்போது வரை பிரமாண பத்திரத்தை கொடுத்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட எந்த ஒரு மாநிலங்களும் இது தொடர்பாக எந்தவொரு பிரமாண பத்திரமும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால், பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாத அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களுடைய தலைமைச் செயலாளர்களும் வரும் நவம்பர் 3ஆம் தேதி நேரில் ஆஜராகி இதற்கான உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்” என உத்தவிட்டுள்ளனர்.
Follow Us