Advertisment

கரூர் துயரம்; உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு - யார் இந்த அஜய் ரஸ்தோகி?

Untitled-2

கரூர் துயர சம்பவத்தின் எதிரொலியாக, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி செந்தில்குமார், தவெக தலைவரான விஜய்யைக் கடுமையாக விமர்சித்ததுடன், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டிருந்தார்.

Advertisment

இந்த உத்தரவை எதிர்த்து, தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. அப்போது, தவெக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், "இந்த வழக்கு விசாரணையின்போது சென்னை உயர் நீதிமன்றம் தவெகவின் கருத்தைக் கேட்கவில்லை. இருப்பினும், முதல் நாளிலேயே நீதிமன்றத்தால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டதோடு, விஜய்க்கு எதிராக உயர் நீதிமன்றம் கருத்துகளைத் தெரிவித்தது," என்றார்.

Advertisment

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், "பரப்புரையில் காவல்துறையினர் கூறிய எந்த வழிமுறைகளையும் தவெக பின்பற்றவில்லை. பரப்புரை செய்வதாகக் கூறிய விஜய், பல மணி நேரம் தாமதமாக வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்," எனக் குற்றம் சாட்டினார். மேலும் வாதிட்ட அவர், "மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சி.பி.ஐ.க்கு வழக்கை மாற்றுவது கூட்டாட்சிக்கு எதிரானது. கரூர் சம்பவத்தில் சட்டப்படி அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன," எனத் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெற்று வரும்போது, சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது ஏன்?" என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, இந்த வழக்கில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனக் கூறி, நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட்டனர். மேலும், சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு கண்காணிக்கும் என்றும், இதற்காக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும், அந்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழர்களாக இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அமைத்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியைப் பற்றி ஆராய்ந்தபோது, பல்வேறு தகவல்கள் வெளிப்பட்டன. ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, 1982ஆம் ஆண்டு சட்டத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கினார். பல சட்டப் பிரிவுகளில் வழக்கறிஞராகப் பணியாற்றிய அஜய் ரஸ்தோகி, 1990ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு, ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர், உயர் நீதிமன்ற நீதிபதி, மாநில சட்ட சேவை ஆணையத்தின் நிர்வாகத் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்துள்ளார். அஜய் ரஸ்தோகி தலைமையின் கீழ், இந்த ஆணையம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு, அஜய் ரஸ்தோகி 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்று, பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பெண் கடற்படை ஊழியர்களுக்கு கட்டாய கமிஷன், ஐ.ஏ.எஸ். தேர்விற்கான வயது வரம்பை நீக்க முடியாது, அங்கன்வாடி ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்கலாம் உள்ளிட்ட பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilaga Vettri Kazhagam CBI police karur vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe