கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டார்.
இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிப்பதற்கு எதிராக தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர் தரப்பில் சிபிஐ விசாரணை கூறியும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விசாரணையானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கு மதுரை கிளையில் உள்ள நிலையில் ஏன் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தினார் எனக் கேள்வி எழுப்பி, தமிழக அரசிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (13-10-25) விசாரணைக்கு வந்தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சிபிஐ விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நீதிபதிகள், ‘ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும். விசாரணையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதை அஜய் ரஸ்தோகி முடிவு செய்யலாம். ’ எனத் தெரிவித்தனர்.
அதனை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்த முறைக்க நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாவது, ‘கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை நீதிபதி செந்தில்குமார் தானாக எடுத்து விசாரித்தற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ரோடு ஷோ நடத்த நெறிமுறைகள் தொடர்பான மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் முறையாக விசாரிக்கவில்லை. தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல் இன்றி வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறை கோரிய வழக்கை கிரிமினல் வழக்காக பட்டியலிட்டு விசாரித்தது எப்படி?. இதற்கு சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் விளக்க வேண்டும். மதுரை வரம்புக்குள் வருவதை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு எப்படி விசாரித்தது?
அரசு ஆணையம் அமைத்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் எப்படி தன்னிச்சையாக உத்தரவிட முடியும்?. ஒரு நபர் ஆணையத்தி முதல்வர் அமைத்த நிலையில் எப்படி தன்னிச்சையாக உத்தரவு பிறப்பிக்க முடியும்?. மனுக்களில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தாண்டி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒரு விவகாரத்தில் வெளிப்படையான பாரபட்சமில்லாத விசாரணை கேட்பது குடிமக்களின் உரிமை. கரூர் விவகாரத்தை மக்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்த விவகாரமாக கருதுகிறோம். ’ எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, சிபிஐ விசாரணை கோரிய மனுதாரர்களாக கூறப்பட்ட செல்வராஜ், ஷர்மிளா ஆகியோர் தாங்கள் மனு தாக்கல் செய்யவே இல்லை என்றும் தங்களுக்கு தெரியாமலேயே உச்ச நீதிமன்றத்தில் தங்கள் பெயர்களில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறி நீதிபதிகளிடம் முறையிட்டனர். அப்போது தமிழக அரசு வாதிடுகையில், ‘மனுதாரர்களுக்கு தெரியாமலேயே மனுக்கல் தாக்கல் செய்யபப்ட்டுள்ளது மிகப்பெரிய மோசடி’ என்று தெரிவித்தனர். இதனை கேட்ட நீதிபதிகள், ‘இருவரின் முறையீட்டையும் மனுவாக தாக்கல் செய்யுங்கள். உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்தனர்.