தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்த திட்டம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து  இந்த வழக்கில் தலைமை நீதிபதி கடந்த 01ஆம் தேதி (01.08.2025) பிறப்பித்த உத்தரவில், “உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசுத் திட்டங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல் முதலமைச்சரின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. அரசுத் திட்டத்தின் பெயரில் அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. ஆளும் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்துவது உச்சநீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது ஆகும்.

எனவே தமிழக அரசு புதிதாகத் தொடங்க உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வர் பெயரையோ, முன்னாள் முதல்வருடைய புகைப்படத்தையோ பயன்படுத்தக்கூடாது. அதே சமயம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்குத் தடை கோரி அதிமுக அளித்த புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கு இந்த வழக்கு தடையாக இருக்காது” என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்திருந்தார். இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் இன்று (06.08.2025) விசாரணைக்கு வந்தது. 

அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகில் ரோத்தகி, வில்சன், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதிடுகையில், “இதற்கு முன்னதாக சுமார் 45 திட்டங்கள் இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்களின் பெயரை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்துமே அரசுத் திட்டங்களாகும். அதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. தேர்தல் ஆணையத்திலும் எந்த ஒரு தடையும் விதிக்கவில்லை” எனத் தெரிவித்தனர். இதற்குத் தலைமை நீதிபதி, “வாழும் அரசியல் கட்சியினுடைய தலைவர்களின் படங்களை விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று இதற்கு முன்னதாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் உள்ளன. அரசியல் கட்சித் தலைவரின் பிரபல பெயர் அல்லது உண்மையான பெயரில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பட்டியலையும் அரசு தாக்கல் செய்துள்ளது” எனத் தெரிவித்தனர். 

Advertisment

அதற்கு சி.வி. சண்முகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மணிந்தர் சிங், “ முதல்வரின் முகவரி என்ற திட்டம் உள்ளது. ஆனால் அதில் முதல்வரின் பெயர் எங்கும் பயன்படுத்தப்படவில்லை” எனத் தெரிவித்தார். இதற்கு நீதிபதி கவாய், “இந்த மனு சரியான சட்ட புரிதலோடு தாக்கல் செய்யப்படவில்லை. அரசியல் போராட்டங்களை வாக்கு தளத்தில் தான் தீர்க்கப்பட வேண்டுமே தவிர நீதிமன்றங்களை. இதற்காக நீதிமன்றங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து இருந்தாலும் மனுதாரர் இது போன்ற ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். எனவே உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதே சமயம் தவறான புரிதலோடு இந்த மனுவைத் தாக்கல் செய்ததன் காரணமாக சி.வி. சண்முகம் தரப்பிற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. உச்சநீதிமன்றம் எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.