தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக எடுத்துக் கொள்ளப்படும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வழங்கியது. அதோடு, ஆளுநர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான், தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் சாசன விதிகளை மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 அரசியல் சாசன கேள்விகள் அடங்கிய குறிப்பை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த மே 15ஆம் தேதி அனுப்பி இருந்தார். அதாவது இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143வது பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்வி எழுப்பினார். இந்நிலையில் இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (20.11.2025) அறிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் சந்திரசேகர் என 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. 

Advertisment

அதில், “மசோதாக்களுக்கு ஆளுநர்கள் காலவரையறையின்றி ஓப்புதலை நிறுத்தி வைக்க முடியாது. மசோதா தொடர்பாகச் சட்டமன்றத்தோடு உள்ள வேறுபாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.  மசோதாவிற்கு இடையூறு விளைவிக்கும் அணுகுமுறையை ஆளுநர்கள் மேற்கொள்ளக்கூடாது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200 மற்றும் 201இன் படி மசோதாக்களுக்கு ஆளுநர்கள்,  குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும்.  மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 4 வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு வாதிட்டது. ஆனால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200இன் கீழ் முடிவெடுக்க ஆளுநருக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. கால வரையறையின்றி மசோதா மீது முடிவெடுக்காமல் கிடப்பில் வைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” உத்தரவிட்டுள்ளனர்.