சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த பாபு என்பவரின் 6 வயது மகள், கடந்த 2017ஆம், ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று காணாமல் போனார். இது குறித்து மாங்காடு போலீசில் அவரது பெற்றோர் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த் என்ற வாலிபர், அந்த குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு சிறுமியை, கொலை செய்து, பின்னர் காட்டிற்குள் எடுத்து சென்று எரிக்க முயன்றதும் தெரியவந்தது.
இதையடுத்து தஷ்வந்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால், சில மாத சிறைவாசத்துக்குப் பிறகு, தஷ்வந்த் ஜாமினில் வெளியே வந்தார். இத்தகைய சூழலில் தான் ஜாமினில் வெளியே வந்த அவர், தனது தாய் சரளாவைக் கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். அதன் பின்னர், அவர் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன்படி அவர், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், தஷ்வந்துக்கு தூக்குத்தண்டனை விதித்து காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் தாய் சரளாவைக் கொலை செய்த வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது நடந்த விசாரணையின் போது, தஷ்வந்தின் தந்தை சேகர் பிறழ் சாட்சியாக மாறினார். இதனால், இந்த கொலை வழக்கில் போதிய ஆதாரம் இல்லையென்று கூறி தாயைக் கொலை வழக்கில் இருந்து தஷ்வந்தை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இருப்பினும், சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் தஷ்வந்த், சிறையில் இருந்து வந்தார்.
இந்நிலையில் தஷ்வந்த மீதான குற்றத்தை உறுதி செய்யத் தவறிவிட்டதாகக் கூறி தஷ்வந்தை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், “சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இந்த குற்றத்தை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.