பல்கலைக்கழக மானியக் குழு, நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பாகுபாடுகளைக் களையவும், மாணவர்களிடையே சமநிலையைப் பேணுவதற்காக "ஒழுங்குமுறை விதிமுறைகள் 2026" என்ற புதிய விதிமுறைகளை அமல்படுத்த இருப்பதாகக் கூறியிருந்தது. இந்த ஒழுங்கு முறை விதிமுறைகள், மாணவர்களிடையே சாதி, மத மற்றும் பாலினம் போன்ற பாகுபாடுகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், இந்த புதிய விதிமுறைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை இன்று நடத்தப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் உத்தவுகளை பிறப்பித்தனர். இந்த உத்தரவின்படி, "புதிய விதிமுறைகளை நிறுத்தி வைக்க வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள 2012 ஆண்டு விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும். அதே நேரத்தில், எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். அதே வேளையில், இந்த புதிய விதிமுறைகள் குறித்து நிபுணர்களை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
பின்னர், நிபுணர்களின் பரிந்துரைகளுக்கேற்ப புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். மத்திய அரசு யுஜிசி க்கு இது சம்பந்தமான பரிந்துரைகளை வழங்க வேண்டும்" எனவும் உத்தரவிட்டுள்ளது. மேலும், "சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகளைக் கடந்தும் சாதிய பாகுபாடுகள் கலையப்படாமல் இருப்பது வருத்தமளிக்கிறது" என்று நீதிமன்றம் வேதனைத் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள, இந்த புதிய விதிமுறைகளுக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளிப்பதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow Us