உச்ச நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சனாதனத்தை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பரப்பப்படும் கருத்துகளை தடுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன்பு நடந்து வந்தது. அப்போது அமர்வு மேடையை நோக்கி வந்த ராகேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் “சனாதனத்தை இழிவு செய்வதை இந்தியா(ஹிந்துஸ்தான்) சகித்துக்கொள்ளாது” என்று கூச்சலிட்டபடி காலணியை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வீச முயன்றார்.
உச்ச நீதிமன்றத்திலேயே தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக செயர்பாட்டாளர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை நீக்கி இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. மேலும், அவரது நுழைவு அட்டையை ரத்து செய்து, உச்ச நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் நடத்தை மற்றும் அவரது தொடர்ச்சியான வருத்தமின்மைக்காக நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (16-10-25) வந்தது. அப்போது வழக்கறிஞர் விகாஸ் சிங், ‘நாங்கள் வழக்கறிஞர் சங்கத்தின் வெளிப்படுத்த விரும்புகிறோம். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற சம்பவத்தால் உச்ச நீதிமன்றத்திற்கு சில சேதங்கள் ஏற்படுத்துகிறது. இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் ஊக்குவிப்பதையும் போலவும், மகிமைப்படுத்துவதை போலவும் பதிவிடப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களில் பல இழிவான கருத்துகளுக்கு தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், ‘இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வழக்கை மேலும் தொடர வேண்டுமா?. தலைமை நீதிபதி ஏற்கனவே அதை விட்டுவிட்டார். தலைமை நீதிபதி மிகவும் தாராள மனப்பான்மை கொண்டவர். இது போன்ற சம்பவங்களால் நீதிமன்றம் பாதிக்கப்படவில்லை என்பதைக் காட்டுகிறது. வன்முறையை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. இந்த வகையான நடவடிக்கைகளை நீங்கள் தொடங்கும்போது என்ன நடக்கும்? சமூக ஊடகங்கள், எல்லாமே விற்பனைக்குரிய பொருளாக மாறும். நமக்கு முன்னால் பல முக்கியமான விஷயங்கள் உள்ள போது, இது நேரத்தை வீணாக்காதா?. இந்த சம்பவம், இயற்கையான மரணமாக இறக்கட்டும். அதற்குத் தகுதியான அவமதிப்புடன் அதன் விதியைச் சந்திக்கட்டும்’ என்று கூறினர்.
இதனிடையே, இந்த சம்பவம் நீதிமன்றத்தின் ஒருமைப்பாட்டை பாதித்துள்ளதாகக் கூறி நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளதாக சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதை தொடர்ந்து நீதிபதிகள், ‘நீதிமன்றத்தில் நமது நடத்தை மூலம்தான் நாம் மக்களின் மரியாதையைப் பெற்றுத் தக்கவைத்துக்கொள்கிறோம். இந்த சம்பவத்தை ஒரு பொறுப்பற்ற குடிமகனின் செயல் என்று நிராகரித்ததன் மூலம் தலைமை நீதிபதி வெளிப்படுத்திய மனப்பான்மை சிறப்பாக பாதுகாக்கப்படுகிறது’ எனக் குறிப்பிட்டனர். இருப்பினும், சமூக ஊடகங்களில் இந்த செயல் புகழ்ச்சி செய்யப்படுவதாலும், நீதிமன்றத்தின் மகத்துவம் குறைத்து மதிப்பீடுவதாகவும் அதை அவமதிப்பாக கருத வேண்டும் என வழக்கறிஞர் விகாஸ் சிங் கூறினார். அப்போது நீதிபதி சூர்ய காந்த், “ஒரு வாரம் காத்திருந்து அது இன்னும் நீடிக்கிறதா என்று பார்ப்போம். தீபாவளி இடைவேளைக்குப் பிறகு ஒரு வாரத்தில் அதைக் கேட்போம்” என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/16/brgavaiii-2025-10-16-15-18-35.jpg)